Monday, August 29, 2016

மிளிர் கல் - இரா.முருகவேள்

பொன்னியின் செல்வனுக்குப் பின் அதில் வரும் இடங்களோடு, மிளிர்கல்லுக்குப் பின்  கண்ணகி போன பூம்புகார் முதல் குமுளி வரையான  சேர்ந்துள்ளன.  திருச்சி முதல் குமுளி வரை மீள் பார்வையாக இருக்கும். கண்ணகி கோயிலிருக்கும் குமுளியிலிருந்து முப்பது கி.மி தொலைவில் தான் கம்பம், அம்மாவின் ஊர். கம்பம் பள்ளத்தாக்கின் வயல்கள் ஊடே  நின்று பார்த்தால் தெரியும் மலைகள் பெரியார் அணையும் புலிகள் காப்பகத்தையும் சேர்ந்தவை. பல  முறை குமுளி சென்றும் சித்திராப் பௌர்ணமி அன்று மட்டும் திறக்கும் இக்கோயிலைப் பார்த்ததில்லை. விவரமில்லாத  சிறு வயது ஞாபகம் : தமிழக கேரளா அரசியலில் சிக்கிய இக்கோவிலின் சீரமைப்புக்கு என் தாத்தா இறப்பதற்கு முன்  பல முறை மனு எழுதியிருக்கிறார்.



சிலப்பதிகாரத்தை பள்ளிப் புத்தகங்களுக்கு வெளியே தேடியதில்லை. ரத்தினக் கற்களையும்  ராசிக் கல்லாக மட்டுமே தெரியும். இன்றும்  பெங்களூர் போன்ற நகர்களில் பெரிய ஹோட்டல்களில் கண்காட்சி போல் வைத்து ராசிக்கற்கள் என்ற பெயரில் கொள்ளை விற்பனை நடைபெறுகிறது. அவை என்னவென்றும்  அவற்றின் பூர்விகமோ அரசியலோ துளியும் தெரியாது. ஆசிரியர் எடுத்துக்கொண்ட தலைப்பு  சிலப்பதிகார மீளாய்வு மூலம் இரத்தினக்கல் அரசியல் சார்ந்தது. மேலோட்டமாக சிலப்பதிகாரம் புரிந்தால் போதுமென்றாலும் புலியூர் கேசிகனின் உரையை வாசித்துவிட்டு மிண்டும்  ஒரு முறை வாசிக்க உத்தேசம்.

கரூர் நாமக்கல்  காங்கேயம் பல்லடம்  பகுதிகளில் தான் ரத்தினங்கள்  கிடைக்கும் என்பதெல்லாம் எனக்குத் தகவல்.

சிலப்பதிகாரம் உண்மையில் நடந்ததா? மதுரை எரிந்ததா ? கண்ணகி ஏன்  தெய்வம்/அடையாளம்  ஆனாள்? ரத்தினங்களுக்கும் சேர நாட்டுக்கும் என்ன சம்மந்தம் ? மதங்களுக்கும் அரசமைப்புகளுக்கும் என்ன சம்மந்தம் ?  பல பல கேள்விகள்,  தகவல்கள் ஆய்வுகள் .  வரலாற்று விரும்பிகளுக்கு அறுசுவை விருந்து.புனைவு  என்று ஆரம்பித்தால் ஏமாற்றமே மிஞ்சும். "மிளிர் கல்" அடர்த்தியானது .

பொன்னுலகம் பதிப்பகம்
திருப்பூர்
288 பக்கங்கள்

Friday, July 15, 2016

காடோடி - நக்கீரன்

 வரலாறோ பூகோளமோ, மேற்கைப் படித்த அல்லது படிக்க வைத்த அளவு நாம்  கிழக்கைப் படிக்கவில்லை என்பது நிதர்சனம். பூமத்திய ரேகையை ஒட்டிய தென் கிழக்கு ஆசியாவில் இரு(க்கும்)ந்த   அடர்ந்த வெப்ப மண்டல மழைக்காடுகள் காங்கோவையும் அமேசானையும் விட எந்த வகையிலும் சளைத்தவை இல்லை.

பல அறிய ஆதி உயிரினங்கள், ஓரிட வாழ்விகள், தொல்குடி மக்கள் கொண்ட  போர்னியா தீவுகள்/காடுகளுக்கு கடவுச் சீட்டில்லாமல் காடோடியோடு ஒரு பயணம். நம்மைப்போல ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டு  சுரண்டல்களுக்கும் சூறையாடல்களுக்கும் உள்ளாகி பின்னர்  மலேசியா இந்தோனேசியா என தூண்டாடப்பட்ட இயற்கையின் கொடை  நிலங்கள் தாம் இவை. இக்காடுகள், அவை கொண்ட உயிரினங்களின்   (தொல்குடி மனிதர்கள் உள்பட) குண நலன்கள்  வாழ்வியலையும் விவரித்து  அவற்றையெல்லாம் எவ்வாறு இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே காடோடி.



காடு குறித்த தகவல்களையெல்லாம் திரட்டி ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிடாமல், அதில்  சில தேர்ந்த பாத்திரங்களை  வாழவைத்து  உயிரோட்டமுள்ள, சொற்களஞ்சியம் நிறைந்த புனைவாக வழங்கியிருக்கிறார் ஆசிரியர். ஒரு புத்தகத்தின் தாக்கம் நம்  சிந்தனைகளைப்  புரட்டி போட்டு யோசிக்கவைப்பதில் இருக்கிறது. அந்த வகையில் முடித்து இரெண்டு நாட்காளாகியும் பிலியவும், ஜோஸும், மூதாய் மரமும் என் தலைக்குள்ளேயே கூடாரம் அடித்து உக்கார்ந்திருக்கிறார்கள். சங்கிலி வாளின் இரைச்சல் இன்னும் காதுகளில்  ஒலித்துக்கொண்டிக்கிறது.

 முழு நீளத் திரைப்படம் எடுக்க அனைத்து அம்சங்களும் கொண்ட கதை. ஆனால் கதை நகரும் காடுகள் சிறிதளவாவது இருக்குமா அல்லது  செயற்கை அட்டைக்காடுகளும் கணினியும் கொண்டே எடுப்போமா என்பது மனிதர்கள்  முடிவு செய்யவேண்டும் 

அக்காடுகளுக்கு ஈடாக இல்லையானாலும் நம் மேற்குத் தொடர்ச்சி மழைக்காடுகளுக்கு என்ன நிலைமை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.வெகு சொற்ப காலமே வாழ்ந்துவரும்   மனித இனம் உலகுக்கு என்ன செய்து தன்னையும் அழித்துக்கு கொண்டிக்கிறது என்பதை உணர கானகத்தோடு    பேசினால் புரியும். இயற்கை ஆர்வலர்கள் காடோடிகளும் தவறாமல்  வாசிக்க வேண்டிய காட்டின் ஆன்மா- காடோடி.

காடோடி - நக்கீரன்
பக்கங்கள் : 340
அடையாளம் பதிப்பகம்     

    

Wednesday, May 11, 2016

அரசியல்

தேர்தல் சாராத ஒரு இயக்கத்தின் மூத்த அறிஞர் சமீபத்தில் சொல்லக் கேட்டது . "கல்லூரிகள், நிறைய பள்ளிகள் என முறையான கல்வி நிலையங்கள் பரவலாக்கப்பட்ட 60, 70கள்ல கல்வியறிவு கொண்ட ஒவ்வொருத்தரும் எதோ ஒரு வழியில் அரசியல் பற்றிய புரிதலோ சார்போ கொண்டிருந்தனர். ஒருவர் நிச்சயம் காங்கிரசாகவோ, பொதுவுடைமைவதியாகவோ, திராவிடக் கொள்கைகளுடனோ திரிவார். இன்றைய நிலைமையில் அரசியல் சிந்தனையே இல்லாத சுயநலம் மிகுந்த , சுற்றுப்புற நிகழ்வின் பிரக்ஞையே இல்லாத, எதற்கும் வளைந்து போகும் ஆபத்தான , படித்த, பெரும்பான்மையானவெத்துக்கூட்டம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சுயமுன்னேற்றம், பொழுதுபோக்குக்கு போன்ற பல பெயர்களில் மட்டையாக்கப் பட்டுத் திரிகின்றனர். " என்றார்.
நியாயமான ஆதங்கம். தேர்தலும் பதவிகளும் அதிகாரங்களும் சார்ந்தது மட்டுமே அரசியல் அல்ல. காலைல பல்லு வெளக்குற பசைல இருந்து உணவு அரசியல், எண்ணெய் அரசியல் , கல்வி அரசியல் , வேலை அரசியல்னு ராத்திரி தூங்குற மெத்த வரைக்கும் எல்லாமே பின்னிப்பிணைஞ்ச அரசியல் தான் . கட்டமைக்கப்பட்ட நுகர்வுகளாலும் , வெத்துக் கொண்டாட்டங்களாலும் விழுங்கப்பட்ட ஒரு சமூக அமைப்பிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?

Saturday, February 27, 2016

தாய்மொழி

நான் பணிபுரியும் நிறுவனம் ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டது. அவரவர் வேலையைப் பொறுத்து அங்கிருப்போருடன் உரையாடல்கள் இருக்கும். பெரும்பாலும் மின்னஞ்சல்கள்.  நிறுவனத்தினுள் ஆங்கிலத்துக்கு இணையான அங்கீகாரம் ஜெர்மானியத்திற்கும்  உண்டு. நிறுவன உள் இணைய தளங்களில் அங்கிருப்போர் பெரும்பாலும் ஜெர்மானிய மொழியிலேயே உரையாடுவர். எல்லாப் பக்கங்களும் ஜெர்மானிய மொழியிலும் இருக்கும்.இந்தியாவிலிருந்து ஜெர்மனி செல்வோருக்கு மொழிப்பயிற்சியும் உண்டு.  வேலை நிமித்தம் இங்கிருந்தே அங்கிருக்கும் கணினிகளில் நுழைந்தால் அதன் மொழி கூட ஜெர்மானியமாகவே  இருக்கும். அங்கிருப்போர் மட்டுமே பேசிக்கொண்டிருந்த மின்னஞ்சல்களில் பின் நாமும் சேர்க்கப்படும் பொது கவனித்தால்  அவர்களுக்குள் ஜெர்மானிய மொழியிலேயே இருக்கும். வெளியாட்கள் சேரும் நேரத்தில் ஆங்கிலம் வந்துவிடும். கவனிக்க, அவர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாமலில்லை, மெத்தப் படித்தோரும், பெரிய பதவிகளில் உள் ளோரும் அடக்கம். உலக அளவில் பொருளாதாரத்திலும் வாழ்க்கைத்  தரத்திலும் நல்ல நிலையில் உள்ளதாகக் கருதப்படும் ஐரோப்பிய நாட்டில் இது தான் நிதர்சனம்.

மற்ற தெற்காசிய நாடுகளான சீனா தைவான் கொரியா ஜப்பான் போப்ற இடங்களில் நிலைமை சற்று வித்தியாசமானது. அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது. நேரில் ஆங்கிலம் பேசினாலே , தாளில் எழுதிக் காட்டுங்கள் அல்லது   மொழி பெயர்ப்பான் மூலம் பேசுங்கள் என்று கூறுவது சகஜம். ஆனால் யாருமே படிப்பிலோ அறிவிலோ தொளில்நுட்பத்திலோ சோடை போனவர்கள் இல்லை.

கடந்த மூன்றரை வருடங்களாக எனது ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் புழங்கு மொழியே தமிழ் தான். அமைப்புகள், பூட்டுத் திரை, முகப்பு, அழைப்பு  என நாட்காட்டி முதல் வாட்சப்  வரை அனைத்தும் தமிழே. தமிழ் எழுத்துகள் தெரிவதில் முதலிலிருந்தே  பிரச்சனை  இல்லை என்றாலும், புழங்கு மொழியாக ஹிந்தி தவிர எந்த இந்திய மொழியும் இவ்வசதியை அடையவில்லை. ஆண்ட்ராய்ட் ஒரு கட்டற்ற மென்பொருள் (Open source software ) ஆதலால் இந்த வசதியை நாமே ஏற்படுத்திக்கொள்ள முடியும். கைபேசி நிறுவனத்தை நம்பி இருக்கத்தேவை இல்லை . உலகெங்கும் உள்ள தமிழர்கள்  சிலர் இவ்வசதியை ஒரு சில தனிப்பட்ட ஆண்ட்ராய்ட் பதிவுகளில் கொண்டு வந்தனர். என்னுடைய வேலையும் ஆண்ட்ராய்ட்  சார்ந்ததாகவே இருந்ததால் சற்றே முயன்று எனது கைபேசியிலும்  பெற்றுக்கொண்டேன். பெரிய சாதனையாக இல்லாவிடிலும் மனதளவில் எனக்கு சந்தோசமான விஷயம்.

இவ்வளவையும் எழுதக் காரணம் , எனது கைபேசியைப் பார்ப்போர் நிறைய பேர் நான் ஏதோ கற்கால மனிதன் போலவே நாகரிகம் இல்லாதவனாய் இருப்பதாக கேலி பேசுவது சகஜமாகிவிட்டது. இதற்கு சில காரணங்களும் உள்ளன. தொழில் நுட்பச் சொற்கள் தமிழில் நிறையவே கண்டுபிடித்தாலும் அவைகளை உபயொகிக்காமலே  இது போன்ற இடங்களில் புதிதாகக் காணும்போது அந்நியமாகத் தெரிகிறது. உதாரணமாக என்பது மின்கலன் என்று தான் இருக்கும். இரண்டாவது ,இவ்வகையான மொழிபெயப்பு வேலையை கணனியே சில சமயம் செய்வதாலும், இதில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்களில்   தொழில்நுட்பமும்  மொழிவளமும் ஒருசேரப்பெற்றவர்கள் மிகக் குறைவு. ஆதாலால் கை பேசியில் உள்ள தமிழ் பல இடங்களில் சற்று மொண்ணையாகவே இருக்கும். உதாரணமாக  என்பது மொட்டையாக "மூடு" என்று இருக்கும். இதை "தவிர்", "முடிந்தது " போன்ற சொற்களை வைத்து அந்தந்த நேரத்தில் உபயோகிக்கலாம். ஒவ்வொரு புதிய ஆன்ராய்ட் பதிவிலும் மொழிபெயர்ப்புத்  தரம் மேம்பட்டதாகவே இருக்கிறது என்பதைக்  குறிப்பிட்டாக வேண்டும்.

தொழில்நுட்பச் சொற்களை விடுங்கள், வாழ்த்துகளும் நன்றிகளும் எப்போதோ  ஆங்கிலத்துக்கு மாறிவிட்டன. அவ்வளவு ஏன் அன்றாடம் சில வருடங்களுக்கெல்லாம் முன்னர் நாம் உபயோகித்த வலது , இடது , சாயுங்காலம், சந்திப்போம் போன்றவைகளே மறைந்துவிட்டன. கடைசியாய் உங்கள் முழுப்  பெயரைத் தமிழில் எழுதியது/ வாசித்தது எப்போது ?

மூன்று மாதங்களுக்கு முன் அம்மாவிற்கு ஆன்றாய்ட் கைபேசி ஒன்று பரிசளித்தோம். எந்த புதிய கைபெசியானாலும்   இப்போது அதன் மென்பொருளைத் தமிழ் மாற்றுவது எனக்கு பரிட்சியமாகிவிட்டது. ஆங்கிலத்திலேயே பழயிருப்பார் என்றாலும், அதைத் தனக்கு நன்கு தெரிந்த தாய் மொழியிலேயே இருக்கட்டும் என்று மாற்றியாயிற்று . வாட்சப், புகைப்படங்கள் குரல் பதிவுகள், காணொளிக் காட்சி என்று அனைத்தும் பார்க்கிறார். வேறு என்ன வேண்டும் ?


  

Thursday, February 4, 2016

பெருந்தலைவர் காமராஜர் - எஸ் கே முருகன்




ஒவ்வொரு தேர்தலிலும் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று கூறுவதைக் கேட்பதுண்டு. இந்த மனிதர் அப்படி என்ன சா தித்து விட்டார். அவரது பின்புலம், கொள்கைகள், ஆட்சி முறை, நேர்மை என எல்லாவற்றையும் அறிந்துகொள்ள ஒரு புத்தகம். திராவிடக் கட்சிகள் என்ன வளர்ச்சியை கொண்டு வந்தார்கள் என்று இன்னும் படிக்கவில்லை. ஆனால் சுதந்திரம் பெற்ற கையோடு அக்கால சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இவர் செய்த வேலைகள் அளப்பரியது. முற்றிலும் சோசியலிசக் கொள்கைகள் கொண்டிருந்தாலும் தமிழகத்தில் கல்வி, விவசாயம், தொழில் வளர்ச்சி சார்ந்த திட்டங்களைப் புரட்டினாலும் இவர் இட்ட அடித்தளத்தை வேறு எவரேனும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகம். இலவசக் கல்வி, மதிய உணவு, நீர் அணைகள் , கனரக தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் என இவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு மேல் பல துறைகளில் சிறிதளவு முன்னேற்றமே கொண்டிருக்கிறோம் என்பது என் கருது. எளிமை, நேர்மை, அதிகம் சோடை போகாத அரசியல் தந்திரங்கள் என ஒரு உதாரணமாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். அரசியலிலும் சமூக சேவையிலும் " வாழந்தார் , செம்மையா வாழ்ந்தார்" என்கிற மாதிரி ஒரு வாழ்க்கை. வாய்ப்பு இருந்தால் நிச்சயம் படிக்காலாம்.

விகடன் பதிப்பகம்.
302 பக்கங்கள்

Sunday, December 6, 2015

தனிமனிதப் பேரிடர் மேலாண்மை

தற்போது ஏற்பட்ட மழை வெள்ளம் போன்ற ஒன்றை மிண்டும் எதிர்கொள்ள நேர்ந்தால் என்ன செய்யலாம் என்பு குறித்த எனது பார்வை.

தொடர்புகள்  :

1) வெறும் 900mAh கொள்ளளவு பேட்டரி கொண்ட அடிப்படை மொபைல் போன், குரல் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் உபயோகத்திற்கு  சில நாட்கள் வரை உயிரோடிருக்கும் .

2) பவர் பேங்க் எனப்படும் தொலைபேசி மற்றும் இன்ன பிற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ள உதவும் புற பேட்டரிகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வாட்சாப் போன்றவைகளை உபயோகிக்க உதவும். இருநூற்றைம்பது ரூபாய் முதல் கிடைக்கின்றன.
http://www.snapdeal.com/products/mobiles-power-banks

3) பிஎஸ்என்எல் தரைவழி மற்றும் செல் போன் இணைப்பு.  இக்கருத்து வேடிக்கையானதாக  இருக்கலாம்.

எல்லா  வெள்ள நாட்களிலும்  தரைவழி தொலைபேசியில்   சென்னையில் இருக்கும்  என் உறவினரைத் தொடர்பு கொள்ள முடிந்தது.  இவை உங்கள் பகுதியில் உள்ள தொலைபேசி அலுவலகத்திலிருந்தே தமக்கான மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றன. அங்கு நாட்கணக் கிலான மின்வெட்டை சமாளிக்கும் மின்சார சேமிப்புத் தொகுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

மின்வேட்டுக்குப்  பின்னர் மொபைல் கோபுரங்கள் டீசல் ஜெனரேட்டர் மூலம் இயக்கப்பட்டன.தனியார் ஆபரேட்டர்கள் ஒரு நாளுக்குள் இதையும்  நிறுத்திவிட்டனர் .  பிஎஸ்என்எல் மட்டுமே  இழப்புகளை ஏற்று தொடர்ந்து இயங்கியது .
 வெள்ளத்தின்  போது சென்னையில் இயங்கிய  மொபைல் கோபுரங்களின்  தோல்வி விகிதம் பின்வருமாறு (ஆதாரம்: தி இந்து  6-12-2015)

பிஎஸ்என்எல். 22.5%
ஏர்டெல். 53%
ஐடியா. 84%
ரிலையன்ஸ். 80%
ஏர்செல். 60%
SSTL. 82%
DDSL. 94%
வோடபோன் 100% (1669 கோபுரங்களும் வேலை செய்யவில்லை )

மின்சாரம் :

4) பொருளாதாரம் ஒத்துழைத்தால்  MPT வசதி கொண்ட  சூரிய ஒளி  மின்சார சாதனத்தை பொருத்திக்கொள்ளவும்.  பின்னர் மின்சாரம் பற்றிய கவலை இல்லவே இல்லை. மேகமூட்டம்,மழை நாட்களானாலும் அதன் உற்பத்தி குறையுமே தவிர முற்றிலும் நின்றுவிடாது.
 மற்ற நாட்களிலும்  இவை நிறைய பணத்தை மிச்சப்படுத்துகிறது.  கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் 40% கட்டணத்தை  சேமிக்கினறோம். ஃ ப்ரிட்ஜும்  தண்ணீர் பம்பும் மட்டுமே மின்சார வாரியத்தைச் சார்ந்து உள்ளன.  

குடிநீர் :

5) மழை பெய்தால் அதை விட சிறந்த குடிநீர் ஏதும் இல்லை.
 எந்த நீரானாலும்  15 நிமிடங்கள் பிரஷர் குக்கரில்  5 விசில்வரை கொதிக்க வைத்தால் பாதுகாப்பானதாகவிடும்.

உணவு:

6) உப்பும் சக்கரையும் கலந்த தண்ணீரை குடித்தே ஒன்றிரண்டு நாட்களை ஓட்டமுடியும்.

கழிவறை:
7)வீட்டிற்கு வெளியே இருக்கும் வெல்ல நீரையே கழிவறையைச் சுத்தம் செய்ய உபயோகித்துக் கொள்ளலாம்.

வாகனங்கள் :
8) ஒருபோதும் ஓடும் நீரில் வாகனங்களை ஓட்ட முயற்சிக்க வேண்டாம். மூன்று   அடி உயர  ஓடும் வெள்ளத்திலேயே  இழுத்துச்  செல்லப்படும் வாய்ப்புகள் அதிகம்.
வாகனத்தின் உள்ளோ மேலோ அமர்ந்து தப்பிக்க முயற்சிக்க வேண்டாம். தள்ளியே இருக்கவும்.

9) ஆர்வம்  இருந்தால்  HAM ரேடியோ பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பேரிடர் கால உபயோகத்திற்கான  ஒரு தொடர்பு உத்தி. சாதாரண ரேடியோ பெட்டி போலவே இருக்கும் இவைகளை  3-4 ஆயிரம் விலைகளில் இருந்தே வாங்கலாம்.  இதே போன்றதொரு கருவி உள்ள எவரிடமும் VHF  அலைவரிசையில் தொடர்பு கொண்டு செய்திகளை அனுப்ப/பெற முடியும். இதற்கான இயக்க உரிமத்தை ஒரு சிறு தேர்வு எழுதிப் பெறலாம். தென் மாநிலங்களுக்கான  இதன் அலுவலகம் சென்னை கந்தன்சாவடியில்  உள்ளது. மேலும் விபரங்களுக்கு
http://www.hamradio.in/amateur_radio/

10) மத்திய அரசாங்கம் நடத்தும் தேசிய பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நிறுவனத்தில் அட்டவணைப்படி நாடு முழுவதும் வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம் , நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் அனைத்திற்கும் மேலாண்மைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. குறைந்த விலையில் இணையம் மூலமாகவும் கற்றுக்கொள்ளலாம். விவரங்களுக்கு   http://nidm.gov.in

தங்களுக்குத்  தெரிந்த வேறு  வழிமுறைகள் இருந்தாலும்  சேர்த்துப் பகிருங்கள்.



Saturday, November 14, 2015

டாலர் தேசம் - பா.ராகவன்

முதலாக மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு புத்தகத் திருவிழாவில் பார்த்தது. அப்போது வரலாற்றில் பெரிய ஆர்வமும்  இல்லை. பிறகெங்கு அரசியல் வரலாறெல்லாம் படிப்பது அதுவும் அமெரிக்காவுடையது ? முடிந்தது. 



சென்ற ஆண்டு வேறொருவரின் பரிந்துரையின் பேரில்    "நிலமெல்லாம் ரத்தம்"(இஸ்ரேல்- பாலஸ்தின்), பின் அதே சூட்டில் "ஆயில் ரேகை (வளைகுடா)" யும் முடித்தபோது அமேரிக்கா புரியாமல்  வளைகுடா வரலாறும் முழுமையாகப் புரியாது என்று தெரிந்தது. 

அடுத்து என்ன என்று பார்த்தால் " டாலர் தேசம் ". விலையும், சைசில்  புத்தகமும் சற்று பெரியதாகப் பட்டது . 850+ பக்கங்கள். அடுத்து வாய்ப்பிருந்தால் நிச்சயம்  படிக்க வேண்டும் என்று உத்தேசம்.
 
அதன் பிறகு சோழர்கள் , ஹிட்லர், திப்பு சுல்தான், மொகலாயர்கள் , மராட்டியர்கள், பிரிட்டன் என்று சில புத்தகங்கள் உருண்டன." போர், புரட்சி  " என்னும் ஒரு நிகழ்வுகள்  வார்த்தையளவில் ரொம்ப பழக்கப் பட்டது போல் ஆயிற்று. இடையே இந்த " உற்பத்தி " , அன்னியச் சலாவணி ", "பங்கு",  "வர்த்தகம்" , "பண வீக்கம் " , " வேலை வாய்ப்பு ", "தொழில் துறை ", "வங்கி" போன்ற அடிப்படைப் பொருளாதார வார்த்தைகளளின் இணைப்பு சற்று புரிய ஆரம்பித்தது. சுற்றிச்  சுற்றி  கடைசியில் எல்லாமே அரசியலையும் பல சமயங்களில் டாலரையும் நோக்கியே சென்றது. 

சரி, படித்து விடலாம் என்று வாங்கியாயிற்று. புத்தகத்தின் சைஸை பார்த்தால் சற்று மலைப்பாகத்தான் இருந்தது. வரிகள் மறைந்து போய், பக்கங்கள்  திரும்புவது தெரியாமல் மனக்கண்ணில்  நாமும் நிகழ்வுகளோடு ஓடிக்கொண்டிருப்பது ஒரு நாவல் வாசிப்பில் நிகழலாம். வரலாற்றையும் இவ்வாறு படிக்க ராகவனைத்தான் தேடவேண்டும்.  எழுத்தும் நடையும் அப்படி.

 நானூறு ஆண்டுகளுக்கு முன் அமேரிக்கா என்னும் நாடே இல்லை. ஆனால் கடந்த நூறு வருடங்களில் அமெரிக்கா இல்லாமல் உலக வரலாறே இல்லை.   உலக நாட்டாமை, உலக போலீஸ், தொழில்நுட்ப , ராணுவ, வர்த்தக ஏகாபத்தியம் என்று பல ரோல்கள். அவர்கள் வரலாற்றைத் தொடர்ந்தால் 20ஆம் நூற்றாண்டுலகின் முக்கிய நிகழ்வுகள், நாடுகள், மனிதர்கள் எல்லாவற்றயுமே படிக்க முடிகிறது.

அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பிசினஸ், பிசினஸ் பிசினஸ். மட்டுமே. . ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் , சாப்ட்வேர் , சில்லறை வர்த்தகம் என்று எல்லாமே பெரு  முதலாளிகள் , அமெரிக்க அரசாங்கம் அவர்களுக்கு மேலே முதலாளிகளுக்கெல்லாம் முதலாளி. ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு என்ன வெளியுறவுக் கொள்கை  இருக்குமோ அதே போன்றதொரு தேசக் கொள்கை.

ஒரு நாடு போரில் பங்கு பெறுகிறது என்றால் அதன் பொருளாதாரம் சுணங்கிப்  படுக்கும் அல்லது லேசான ஆட்டமாவது காணும் என்பது இயல்பு. அமெரிக்க இல்லாத போரே இல்லை. தென் அமேரிக்கா, ஐரோப்பா, வளைகுடா, ஆப்ரிக்கா , மேற்காசிய , கிழக்காசியா, கொரியா என மனித சஞ்சாரம் உள்ள எல்லாப்பக்கமும் சண்டைக்குப் போய் இருக்கிறார்கள்.முக்கால்வாசி இன்னொரு நாட்டுக்குள் வாலண்டியராக மூக்கை நுழைத்து பஞ்சாயத்து பண்ணியது. ஆனாலும் அதன் ராணுவ பட்ஜெட்  பல பில்லியன்கள்  கூடிக்  கொண்டே போகுதே தவிர உள்நாட்டு  சொகுசுக்கும் குறைவில்லை.


 புத்தகத்தின் தலைப்பைப் பார்த்த போது வித்தியாசமாகத் தெரிந்தது. அதென்ன "அரசியல் வரலாறு " ? வரலாறு என்று சொன்னால் மட்டும் போதாதா? யோசித்துப் பார்த்தால் அமெரிக்காவுக்கு என்று வேறு எந்த வரலாறும் கிடையாது. கலை, கலாச்சாரம், மொழி , மதம் என்று எல்லாமே இரவல் வாங்கியது அல்லது இல்லவே இல்லை. செவ்விந்தியர்கள் மன்னிப்பார்களாக.

ஏறக்குறைய  வாஸ்கோ த காமா இங்கு கால் ஊன்றிய போது  தான் கொலம்பஸ் அங்கு கால் ஊன்றினார். தொடக்கத்தில் அவர்களும் ஒரு பிரிட்டன் காலனி தான்.  என்ன ஒரு வித்தியாசம்,  அப்போது நம்மிடம் எல்லாமே இருந்தது , அவர்களிடம் ஒன்றுமே இல்லை . விடுதலைப் போராட்டம் , உலகின் முதல் ஜன நாயக நாடு என்று அதன் பிறகு அவர்கள் அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்த பாதை தான் "டாலர் தேசம் ". 

பத்தாண்டுகளுக்கு முன் வந்த புத்தகம். ஜூனியர் புஷ் சதாமை கொன்று 2005ல் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலை எதிர் நோக்கியதோடு முடிகிறது.   ஆனாலும் அமெரிக்காவைத்  தமிழில் புரிந்து  கொள்ள ஏதுவான புத்தகம்.

பதிப்பாளர்: மதி நிலையம்.