Tuesday, September 30, 2014

"இது யாருடைய வகுப்பறை? "- இரா. நடராசன்


சில நட்புகளும், நல்ல புத்தகங்களும் நம் சுய, முன் அறிந்த கருத்துத் தளங்களை மாற்ற வல்லவை . அவற்றுள் சில புத்தகங்கள் நம் அன்றாட வாழ்வியல் சிந்தனைகளின் மீதே ஆளுமை கொள்ளும் . இவை பெரும்பாலும் அடிப்படை விஷயங்கள் குறித்து நாம் அறியாத வரலாறையோ, மறைக்கப்பட்ட , அப்பட்டமான, கேட்க விரும்பாத செய்திகள் , அது குறித்த ஆய்வுகள், நிகழ் சமூகத்தின் போலி முகமூடிகளைக் கிழிக்கும் மாற்றுச் சிந்தனைகளையோ தாங்கி வரும். அது பேசும் பொருளின் மீது நம்மை அறியாத ஒரு தேடல் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் பாலினம், பெண்கள் , ஆண்-பெண் சமூக நிலை மீதான புரிதல்களை மாற்றி, சிந்தனைகள், அதனூடான நிகழ்வுகளை நோக்கும் கோணங்களை என்னளவில் அடியோடு புரட்டிப்போட்டது சில வருடங்களுக்கு முன் வாசித்த மருத்துவர் ஷாலினி எழுதிய "பெண்ணின் மறுபக்கம்". புத்தகங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த காலகட்டத்த்திற்குப் பின் வெகு நாட்களுக்குப் பிறகு மற்றுமொரு அடிப்படை விஷயத்தின் மீதான கோணங்களை மாற்றியது இவ்வருடத்தின் பால சாகித்திய விருது வென்ற ஆயிஷா இரா. நடராசன் எழுதிய "இது யாருடைய வகுப்பறை? ". பிறந்ததிலிருந்து இறக்கும் வரை நாம் அறிந்தோ அறியாமலோ, வேண்டியோ வேண்டாமலோ எல்லா சூழ்நிலைகளிலும் தானாக நடக்கும் ஒரு நிகழ்வு கற்றல். மண்ணில் தோன்றி வெகு சொற்ப காலமே ஆயிருந்தாலும் மனித குலத்தின் அசுர வளர்ச்சிக்கு காரணம் கல்வியும், கற்றலுமே. புற்றீசல் போல உயர்ந்துவிட்ட கல்வித் தந்தைகளின் தயவில் இன்று நிகழும் கல்வி முறையின் மீதும், ஆசிரிய - மாணவ உறவுகளின் மீதும் கருத்துக் கூறும் நம்மில் எத்தனை பேர் அவைகளின் பரிணாமும், இன்று ஏன்  இவ்வாறு இருக்கிறதென்ற வரலாறையும்  பற்றி சிந்தித்திருக்கிறோம் ? . முதல் பாகத்தில் கல்விக்கும் பள்ளிக்கல்விக்குமான வேறுபாடு, இன்று நாம் கண்டுகொண்டிருக்கும் உலகளாவிய பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளின் தோன்றல், சரித்திரம், நிறை குறைகள் , குருகுலக் கல்விக் காலம் முதல் ஆங்கிலேயர்கள், மெக்காலே, விடுதலைக்குப் பின் இன்று வரையான நம் நாட்டின் கல்வி முறைச் சரித்திரம் குறித்த ஆய்வுகளைப் பேசுகிறது இந்நூல். அதன் பின் குழந்தைகளின் உளவியல் ஆய்வு, ஆசிரியரின் பங்கு பற்றிய ஆய்வுகளை விவரிக்கிறார் ஆசிரியர். பல நூறாண்டு காலமாக நம் நாட்டில் நிலவி வந்த சட்டங்கள் சூழல்கள், மாற்றங்கள், நம் மீதான அவைகளின் தாக்கம் போன்றவற்றைப் புரிந்தாலே ஒழிய இன்று நாம் எங்கு நிற்கிறோம், எதை நோக்கி நகர வேண்டும் என்ற முடிவுகளைத் தெளிவாக விவரிக்க இயலும் . அடிப்படையில் இரா. நடராசன் ஒரு அனுபவமிக்க ஆசிரியர்.புத்தகம் கல்வி சூழலில் இருப்பவர்களை, முக்கியமாக ஆசிரியர்களை நோக்கி எழுதப் பட்டிருந்தாலும், ஒரு குழந்தையை குழந்தையாகப் பார்க்காமல், ஒரு சந்தை பொருளாக, கருத்து அடிமைகளாக மாற்றி, அவர்களின் மீது
அசாதாரணமான வன்முறைகளை சாதாரணமாக நிகழ்த்திப்ப் பார்க்கும் நம் சமூகத்தின் பெற்றோர் , பொத்தாம் பொதுவாகக் கல்வி முறை, பள்ளி கூடங்கள், பாட புத்தகங்கள் மீது கருத்துகளை அள்ளி வீசுவோர் அனைவரும் இந்நூலிலிருந்து அறிந்து தெளிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். கற்றலிலேயே இயங்கும் வாழ்வில் சிறு பகுதியை ஒதுக்கி அது குறித்து அறிய ஒரு முயற்சி .

"இது யாருடைய வகுப்பறை? "- இரா. நடராசன்
248 பக்கங்கள்
Books for children வெளியீடு
செப்டம்பர் 2013
http://www.udumalai.com/?prd=ithu%20yarudaya%20vagupparai?&page=products&id=13583