Monday, September 21, 2015

கல்விக்கான ஒதுக்கீடுகள்

கோவை கேபிள் இணைப்புகளில் Auto tune செய்தாலே முதல் எண்ணில் சுவாரசியமான தனி ஒரு அலைவரிசை (ஜெயா டி வி அல்ல ) வருகிறது ( எவ்வளவு நாளாக என்றும், மற்ற பகுதிகளில் எப்படியென்று தெரியவில்லை ). எல்லா நேரமும் மாண்புமிகு புரட்சிதலைவி  அவர்களின்  சாதனைகளை  அரசு திரைப்படப் பிரிவும், செய்தி- மக்கள் தொடர்புத் துறையும் விளம்பரங்களாக ஒளிபரப்புகிறார்கள் . மாநில முதல்வர் மக்கள் முதல்வராக இருந்த போதும் இவை சென்னையில் இயங்கும் வால்வோ நகரப்பெருந்துகளிலும் ஒளிபரப்பபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைய நடிக நடிகைகள் பேசுகிறார்கள். படம் ரிலிஸ் ஆகணும்ல? கல்விச் சலுகைகள், திட்டங்கள் பற்றி விவேக்கும் ஒரு வெளிநாட்டவரும் தோன்றும் ஒரு காட்சி ஜாலி. சாதனைகளை ஒளிபரப்புவது பிரச்சனை அல்ல. அதை ஏன் தனி ஒரு அலைவரிசியில் மக்கள் பணத்தில் செய்ய வேண்டும்? சட்ட சபை நிகழ்வுகளை ஒளிபரப்ப நிதி இல்லை என மாநில அரசு நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் தெரிவித்தது நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல. 

சரி, கல்விக்கான ஒதுக்கீடுகள் குறித்த சில தகவல்கள். தேசிய அளவில் கல்விக்கு நாம் ஒதுக்கியிருப்பது GDPல் மூன்று சதவிகிதம். GDP சதவிகித ஒதுக்கீடு வாரியாக உலக அளவில் 144வது இடம்.

இரண்டாம் உலகப் போருக்ககுப்பின் நடந்த வியட்நாம் போர் போன்றவைகளின் முடிவில் போர் அனாதைகளும் ஆதரவற்றோரும் பெருகி யபோது   உலக அளவில் குழந்தைகள் உரிமைக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது. ஐநாவும் வளர்ந்த நாடுகளும் வளரும் பின்தங்கிய நாடுகளுக்கு இதற்கான நிதி அளிக்கத் தொடங்கின. இதில் நம் நாடும் அடங்கும். யுனெஸ்கோ , உலகவங்கி , பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து மத்திய அரசுக்கு நிதி அளிக்கப்படுகிறது. இது பல திட்டங்கள் வாயிலாக அமல்படுத்தப்பட்டு கணக்கு காட்டப்படும்.

கல்வித் துறை மத்திய மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் வருகிறது.  இருவருமே செலவுகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். மாநில அரசு 18-20 ஆயிரம் கோடிகளை ஒதுக்கியிருக்கிறது. இதில் அடங்கும் மத்திய அரசின் தொகுதி, ஒன்றோ அதற்கும் மேற்பட்ட திட்டங்கள் மூலம் அளிக்கப்படும். 65 முதல் 75 சதவிகிதம் வரை திட்டங்களின் மத்திய பங்களிப்பு இருக்கும். இதையெல்லாம் சேர்த்தே பெரிய தொகையை கல்விக்காக செலவிடப்பட்டதாக காட்டிக்கொள்ளலாம்.விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குறிப்பிட்டதொகையை இதற்கு செலவிட்டே ஆக வேண்டும். ஆக, கல்விக்கு மத்திய / மாநில அரசுகள் மட்டுமே நிதிஒதுக்குவதில்லை , உலகெங்கிருந்தும் வழங்கப்படுகிறது.

உதாரணமாக மத்திய அரசின் நட்சத்திர திட்டமான "அனைவருக்கும் கல்வி " Sarva Siksha Abhiyan (SSA). 2002ல் ஆரம்பிக்கப்பட்டது. மேற்சொன்ன வெளிநாட்டு அமைப்பு களிடமிருந்து வரும் நிதியில் செயல் படுத்தப்படுவது. உலக அளவில் இன்றும் இது கல்விக்கான ஒரு பெரிய திட்டமும், நம் தொடக்கக் கல்வி வளர்ச்சியில் இன்றி அமையாததும் ஆகிறது. கல்வி வட்டாரங்களில் தொடக்கக் கல்வி என்றாலே SSA  தான் என்கிற நிலைமை .

ஒரு பென்சில் மீது  குழந்தைகள் அமர்ந்திருப்பது போல படம் கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் வரையப்பட்டிருப்பதைக்  கண்டிருப்பீர்கள். "ஸ்கூலுக்கு செல்வோம் நாம் !" என்று 2003-2004 காலகட்டத்தில் அதிகம் தொலைக் காட்சிகளில் விளம்பரம் ஒளிபரப்பப் பட்டது ஞாபகம் இருக்கலாம்.

தொடக்கக் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் இந்த நிதியில் ஆசிரியர் சம்பளம், பள்ளிக் கட்டிடம் முதல் புத்தகங்கள்  வரை அனைத்தும் அடங்கும் .  ஒவ்வொரு வருடமும் ஒதுக்கப்பட்ட நிதிக்கான கணக்கை மத்தியில் சமர்பிக்கவேண்டும்.  தவறும் பட்சத்தில் நிதி குறையும்/வராமலும் போகலாம்.  

2014- 2015 ஆம் ஆண்டு SSAவிற்கான மத்திய ஒதுக்கீடு கிட்டத்தட்ட 1.2ஆயிரம் கோடி. மீதம்  மாநில அரசு ஒதுக்கியது.(65:35).  ஆசிரியர்களின் சம்பளம் இதில் முக்கியமான பங்கு. எனவே  இதெல்லாம் திட்டமிடாத பட்ஜெட் பகுதியில் வருகிறது. SSA திட்டம் நிறுத்தப்பட்டால் இதெல்லாம் அரசின் சுமைகளில் சேரும்.

உயர்நிலைக்  கல்விக்கான நிதி உதவிகள்   Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) திட்டம், (2009ல் தொடங்கப்பட்டது),  Rashtriya Uchchattar Shiksha Abhiyan (RUSA) (2013ல் தொடங்கப்பட்டது ) திட்டங்கள் மூலம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இவைகளுக்கும் கணிசமான வெளிநாட்டுத் தொகை வருகிறது. இதுபோல 22 திட்டங்கள் மத்தியில் இருந்து இயக்கப்படுகிறன.  

"அனைவருக்கும் கல்வி " திட்டத்திலும் நம் மாநில அளவில் குளறுபடிகள் உள்ளன. இதுபற்றி பின்பு காண்போம்.

தரவுகள் : விக்கிபிடியா, மத்திய மாநில அரசு கல்வி/பொது நிதி மற்றும் SSA பொது/தணிக்கை அறிக்கைகள்.