Sunday, December 6, 2015

தனிமனிதப் பேரிடர் மேலாண்மை

தற்போது ஏற்பட்ட மழை வெள்ளம் போன்ற ஒன்றை மிண்டும் எதிர்கொள்ள நேர்ந்தால் என்ன செய்யலாம் என்பு குறித்த எனது பார்வை.

தொடர்புகள்  :

1) வெறும் 900mAh கொள்ளளவு பேட்டரி கொண்ட அடிப்படை மொபைல் போன், குரல் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் உபயோகத்திற்கு  சில நாட்கள் வரை உயிரோடிருக்கும் .

2) பவர் பேங்க் எனப்படும் தொலைபேசி மற்றும் இன்ன பிற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ள உதவும் புற பேட்டரிகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வாட்சாப் போன்றவைகளை உபயோகிக்க உதவும். இருநூற்றைம்பது ரூபாய் முதல் கிடைக்கின்றன.
http://www.snapdeal.com/products/mobiles-power-banks

3) பிஎஸ்என்எல் தரைவழி மற்றும் செல் போன் இணைப்பு.  இக்கருத்து வேடிக்கையானதாக  இருக்கலாம்.

எல்லா  வெள்ள நாட்களிலும்  தரைவழி தொலைபேசியில்   சென்னையில் இருக்கும்  என் உறவினரைத் தொடர்பு கொள்ள முடிந்தது.  இவை உங்கள் பகுதியில் உள்ள தொலைபேசி அலுவலகத்திலிருந்தே தமக்கான மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றன. அங்கு நாட்கணக் கிலான மின்வெட்டை சமாளிக்கும் மின்சார சேமிப்புத் தொகுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

மின்வேட்டுக்குப்  பின்னர் மொபைல் கோபுரங்கள் டீசல் ஜெனரேட்டர் மூலம் இயக்கப்பட்டன.தனியார் ஆபரேட்டர்கள் ஒரு நாளுக்குள் இதையும்  நிறுத்திவிட்டனர் .  பிஎஸ்என்எல் மட்டுமே  இழப்புகளை ஏற்று தொடர்ந்து இயங்கியது .
 வெள்ளத்தின்  போது சென்னையில் இயங்கிய  மொபைல் கோபுரங்களின்  தோல்வி விகிதம் பின்வருமாறு (ஆதாரம்: தி இந்து  6-12-2015)

பிஎஸ்என்எல். 22.5%
ஏர்டெல். 53%
ஐடியா. 84%
ரிலையன்ஸ். 80%
ஏர்செல். 60%
SSTL. 82%
DDSL. 94%
வோடபோன் 100% (1669 கோபுரங்களும் வேலை செய்யவில்லை )

மின்சாரம் :

4) பொருளாதாரம் ஒத்துழைத்தால்  MPT வசதி கொண்ட  சூரிய ஒளி  மின்சார சாதனத்தை பொருத்திக்கொள்ளவும்.  பின்னர் மின்சாரம் பற்றிய கவலை இல்லவே இல்லை. மேகமூட்டம்,மழை நாட்களானாலும் அதன் உற்பத்தி குறையுமே தவிர முற்றிலும் நின்றுவிடாது.
 மற்ற நாட்களிலும்  இவை நிறைய பணத்தை மிச்சப்படுத்துகிறது.  கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் 40% கட்டணத்தை  சேமிக்கினறோம். ஃ ப்ரிட்ஜும்  தண்ணீர் பம்பும் மட்டுமே மின்சார வாரியத்தைச் சார்ந்து உள்ளன.  

குடிநீர் :

5) மழை பெய்தால் அதை விட சிறந்த குடிநீர் ஏதும் இல்லை.
 எந்த நீரானாலும்  15 நிமிடங்கள் பிரஷர் குக்கரில்  5 விசில்வரை கொதிக்க வைத்தால் பாதுகாப்பானதாகவிடும்.

உணவு:

6) உப்பும் சக்கரையும் கலந்த தண்ணீரை குடித்தே ஒன்றிரண்டு நாட்களை ஓட்டமுடியும்.

கழிவறை:
7)வீட்டிற்கு வெளியே இருக்கும் வெல்ல நீரையே கழிவறையைச் சுத்தம் செய்ய உபயோகித்துக் கொள்ளலாம்.

வாகனங்கள் :
8) ஒருபோதும் ஓடும் நீரில் வாகனங்களை ஓட்ட முயற்சிக்க வேண்டாம். மூன்று   அடி உயர  ஓடும் வெள்ளத்திலேயே  இழுத்துச்  செல்லப்படும் வாய்ப்புகள் அதிகம்.
வாகனத்தின் உள்ளோ மேலோ அமர்ந்து தப்பிக்க முயற்சிக்க வேண்டாம். தள்ளியே இருக்கவும்.

9) ஆர்வம்  இருந்தால்  HAM ரேடியோ பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பேரிடர் கால உபயோகத்திற்கான  ஒரு தொடர்பு உத்தி. சாதாரண ரேடியோ பெட்டி போலவே இருக்கும் இவைகளை  3-4 ஆயிரம் விலைகளில் இருந்தே வாங்கலாம்.  இதே போன்றதொரு கருவி உள்ள எவரிடமும் VHF  அலைவரிசையில் தொடர்பு கொண்டு செய்திகளை அனுப்ப/பெற முடியும். இதற்கான இயக்க உரிமத்தை ஒரு சிறு தேர்வு எழுதிப் பெறலாம். தென் மாநிலங்களுக்கான  இதன் அலுவலகம் சென்னை கந்தன்சாவடியில்  உள்ளது. மேலும் விபரங்களுக்கு
http://www.hamradio.in/amateur_radio/

10) மத்திய அரசாங்கம் நடத்தும் தேசிய பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நிறுவனத்தில் அட்டவணைப்படி நாடு முழுவதும் வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம் , நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் அனைத்திற்கும் மேலாண்மைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. குறைந்த விலையில் இணையம் மூலமாகவும் கற்றுக்கொள்ளலாம். விவரங்களுக்கு   http://nidm.gov.in

தங்களுக்குத்  தெரிந்த வேறு  வழிமுறைகள் இருந்தாலும்  சேர்த்துப் பகிருங்கள்.



Saturday, November 14, 2015

டாலர் தேசம் - பா.ராகவன்

முதலாக மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு புத்தகத் திருவிழாவில் பார்த்தது. அப்போது வரலாற்றில் பெரிய ஆர்வமும்  இல்லை. பிறகெங்கு அரசியல் வரலாறெல்லாம் படிப்பது அதுவும் அமெரிக்காவுடையது ? முடிந்தது. 



சென்ற ஆண்டு வேறொருவரின் பரிந்துரையின் பேரில்    "நிலமெல்லாம் ரத்தம்"(இஸ்ரேல்- பாலஸ்தின்), பின் அதே சூட்டில் "ஆயில் ரேகை (வளைகுடா)" யும் முடித்தபோது அமேரிக்கா புரியாமல்  வளைகுடா வரலாறும் முழுமையாகப் புரியாது என்று தெரிந்தது. 

அடுத்து என்ன என்று பார்த்தால் " டாலர் தேசம் ". விலையும், சைசில்  புத்தகமும் சற்று பெரியதாகப் பட்டது . 850+ பக்கங்கள். அடுத்து வாய்ப்பிருந்தால் நிச்சயம்  படிக்க வேண்டும் என்று உத்தேசம்.
 
அதன் பிறகு சோழர்கள் , ஹிட்லர், திப்பு சுல்தான், மொகலாயர்கள் , மராட்டியர்கள், பிரிட்டன் என்று சில புத்தகங்கள் உருண்டன." போர், புரட்சி  " என்னும் ஒரு நிகழ்வுகள்  வார்த்தையளவில் ரொம்ப பழக்கப் பட்டது போல் ஆயிற்று. இடையே இந்த " உற்பத்தி " , அன்னியச் சலாவணி ", "பங்கு",  "வர்த்தகம்" , "பண வீக்கம் " , " வேலை வாய்ப்பு ", "தொழில் துறை ", "வங்கி" போன்ற அடிப்படைப் பொருளாதார வார்த்தைகளளின் இணைப்பு சற்று புரிய ஆரம்பித்தது. சுற்றிச்  சுற்றி  கடைசியில் எல்லாமே அரசியலையும் பல சமயங்களில் டாலரையும் நோக்கியே சென்றது. 

சரி, படித்து விடலாம் என்று வாங்கியாயிற்று. புத்தகத்தின் சைஸை பார்த்தால் சற்று மலைப்பாகத்தான் இருந்தது. வரிகள் மறைந்து போய், பக்கங்கள்  திரும்புவது தெரியாமல் மனக்கண்ணில்  நாமும் நிகழ்வுகளோடு ஓடிக்கொண்டிருப்பது ஒரு நாவல் வாசிப்பில் நிகழலாம். வரலாற்றையும் இவ்வாறு படிக்க ராகவனைத்தான் தேடவேண்டும்.  எழுத்தும் நடையும் அப்படி.

 நானூறு ஆண்டுகளுக்கு முன் அமேரிக்கா என்னும் நாடே இல்லை. ஆனால் கடந்த நூறு வருடங்களில் அமெரிக்கா இல்லாமல் உலக வரலாறே இல்லை.   உலக நாட்டாமை, உலக போலீஸ், தொழில்நுட்ப , ராணுவ, வர்த்தக ஏகாபத்தியம் என்று பல ரோல்கள். அவர்கள் வரலாற்றைத் தொடர்ந்தால் 20ஆம் நூற்றாண்டுலகின் முக்கிய நிகழ்வுகள், நாடுகள், மனிதர்கள் எல்லாவற்றயுமே படிக்க முடிகிறது.

அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பிசினஸ், பிசினஸ் பிசினஸ். மட்டுமே. . ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் , சாப்ட்வேர் , சில்லறை வர்த்தகம் என்று எல்லாமே பெரு  முதலாளிகள் , அமெரிக்க அரசாங்கம் அவர்களுக்கு மேலே முதலாளிகளுக்கெல்லாம் முதலாளி. ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு என்ன வெளியுறவுக் கொள்கை  இருக்குமோ அதே போன்றதொரு தேசக் கொள்கை.

ஒரு நாடு போரில் பங்கு பெறுகிறது என்றால் அதன் பொருளாதாரம் சுணங்கிப்  படுக்கும் அல்லது லேசான ஆட்டமாவது காணும் என்பது இயல்பு. அமெரிக்க இல்லாத போரே இல்லை. தென் அமேரிக்கா, ஐரோப்பா, வளைகுடா, ஆப்ரிக்கா , மேற்காசிய , கிழக்காசியா, கொரியா என மனித சஞ்சாரம் உள்ள எல்லாப்பக்கமும் சண்டைக்குப் போய் இருக்கிறார்கள்.முக்கால்வாசி இன்னொரு நாட்டுக்குள் வாலண்டியராக மூக்கை நுழைத்து பஞ்சாயத்து பண்ணியது. ஆனாலும் அதன் ராணுவ பட்ஜெட்  பல பில்லியன்கள்  கூடிக்  கொண்டே போகுதே தவிர உள்நாட்டு  சொகுசுக்கும் குறைவில்லை.


 புத்தகத்தின் தலைப்பைப் பார்த்த போது வித்தியாசமாகத் தெரிந்தது. அதென்ன "அரசியல் வரலாறு " ? வரலாறு என்று சொன்னால் மட்டும் போதாதா? யோசித்துப் பார்த்தால் அமெரிக்காவுக்கு என்று வேறு எந்த வரலாறும் கிடையாது. கலை, கலாச்சாரம், மொழி , மதம் என்று எல்லாமே இரவல் வாங்கியது அல்லது இல்லவே இல்லை. செவ்விந்தியர்கள் மன்னிப்பார்களாக.

ஏறக்குறைய  வாஸ்கோ த காமா இங்கு கால் ஊன்றிய போது  தான் கொலம்பஸ் அங்கு கால் ஊன்றினார். தொடக்கத்தில் அவர்களும் ஒரு பிரிட்டன் காலனி தான்.  என்ன ஒரு வித்தியாசம்,  அப்போது நம்மிடம் எல்லாமே இருந்தது , அவர்களிடம் ஒன்றுமே இல்லை . விடுதலைப் போராட்டம் , உலகின் முதல் ஜன நாயக நாடு என்று அதன் பிறகு அவர்கள் அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்த பாதை தான் "டாலர் தேசம் ". 

பத்தாண்டுகளுக்கு முன் வந்த புத்தகம். ஜூனியர் புஷ் சதாமை கொன்று 2005ல் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலை எதிர் நோக்கியதோடு முடிகிறது.   ஆனாலும் அமெரிக்காவைத்  தமிழில் புரிந்து  கொள்ள ஏதுவான புத்தகம்.

பதிப்பாளர்: மதி நிலையம்.



Monday, September 21, 2015

கல்விக்கான ஒதுக்கீடுகள்

கோவை கேபிள் இணைப்புகளில் Auto tune செய்தாலே முதல் எண்ணில் சுவாரசியமான தனி ஒரு அலைவரிசை (ஜெயா டி வி அல்ல ) வருகிறது ( எவ்வளவு நாளாக என்றும், மற்ற பகுதிகளில் எப்படியென்று தெரியவில்லை ). எல்லா நேரமும் மாண்புமிகு புரட்சிதலைவி  அவர்களின்  சாதனைகளை  அரசு திரைப்படப் பிரிவும், செய்தி- மக்கள் தொடர்புத் துறையும் விளம்பரங்களாக ஒளிபரப்புகிறார்கள் . மாநில முதல்வர் மக்கள் முதல்வராக இருந்த போதும் இவை சென்னையில் இயங்கும் வால்வோ நகரப்பெருந்துகளிலும் ஒளிபரப்பபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைய நடிக நடிகைகள் பேசுகிறார்கள். படம் ரிலிஸ் ஆகணும்ல? கல்விச் சலுகைகள், திட்டங்கள் பற்றி விவேக்கும் ஒரு வெளிநாட்டவரும் தோன்றும் ஒரு காட்சி ஜாலி. சாதனைகளை ஒளிபரப்புவது பிரச்சனை அல்ல. அதை ஏன் தனி ஒரு அலைவரிசியில் மக்கள் பணத்தில் செய்ய வேண்டும்? சட்ட சபை நிகழ்வுகளை ஒளிபரப்ப நிதி இல்லை என மாநில அரசு நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் தெரிவித்தது நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல. 

சரி, கல்விக்கான ஒதுக்கீடுகள் குறித்த சில தகவல்கள். தேசிய அளவில் கல்விக்கு நாம் ஒதுக்கியிருப்பது GDPல் மூன்று சதவிகிதம். GDP சதவிகித ஒதுக்கீடு வாரியாக உலக அளவில் 144வது இடம்.

இரண்டாம் உலகப் போருக்ககுப்பின் நடந்த வியட்நாம் போர் போன்றவைகளின் முடிவில் போர் அனாதைகளும் ஆதரவற்றோரும் பெருகி யபோது   உலக அளவில் குழந்தைகள் உரிமைக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது. ஐநாவும் வளர்ந்த நாடுகளும் வளரும் பின்தங்கிய நாடுகளுக்கு இதற்கான நிதி அளிக்கத் தொடங்கின. இதில் நம் நாடும் அடங்கும். யுனெஸ்கோ , உலகவங்கி , பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து மத்திய அரசுக்கு நிதி அளிக்கப்படுகிறது. இது பல திட்டங்கள் வாயிலாக அமல்படுத்தப்பட்டு கணக்கு காட்டப்படும்.

கல்வித் துறை மத்திய மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் வருகிறது.  இருவருமே செலவுகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். மாநில அரசு 18-20 ஆயிரம் கோடிகளை ஒதுக்கியிருக்கிறது. இதில் அடங்கும் மத்திய அரசின் தொகுதி, ஒன்றோ அதற்கும் மேற்பட்ட திட்டங்கள் மூலம் அளிக்கப்படும். 65 முதல் 75 சதவிகிதம் வரை திட்டங்களின் மத்திய பங்களிப்பு இருக்கும். இதையெல்லாம் சேர்த்தே பெரிய தொகையை கல்விக்காக செலவிடப்பட்டதாக காட்டிக்கொள்ளலாம்.விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குறிப்பிட்டதொகையை இதற்கு செலவிட்டே ஆக வேண்டும். ஆக, கல்விக்கு மத்திய / மாநில அரசுகள் மட்டுமே நிதிஒதுக்குவதில்லை , உலகெங்கிருந்தும் வழங்கப்படுகிறது.

உதாரணமாக மத்திய அரசின் நட்சத்திர திட்டமான "அனைவருக்கும் கல்வி " Sarva Siksha Abhiyan (SSA). 2002ல் ஆரம்பிக்கப்பட்டது. மேற்சொன்ன வெளிநாட்டு அமைப்பு களிடமிருந்து வரும் நிதியில் செயல் படுத்தப்படுவது. உலக அளவில் இன்றும் இது கல்விக்கான ஒரு பெரிய திட்டமும், நம் தொடக்கக் கல்வி வளர்ச்சியில் இன்றி அமையாததும் ஆகிறது. கல்வி வட்டாரங்களில் தொடக்கக் கல்வி என்றாலே SSA  தான் என்கிற நிலைமை .

ஒரு பென்சில் மீது  குழந்தைகள் அமர்ந்திருப்பது போல படம் கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் வரையப்பட்டிருப்பதைக்  கண்டிருப்பீர்கள். "ஸ்கூலுக்கு செல்வோம் நாம் !" என்று 2003-2004 காலகட்டத்தில் அதிகம் தொலைக் காட்சிகளில் விளம்பரம் ஒளிபரப்பப் பட்டது ஞாபகம் இருக்கலாம்.

தொடக்கக் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் இந்த நிதியில் ஆசிரியர் சம்பளம், பள்ளிக் கட்டிடம் முதல் புத்தகங்கள்  வரை அனைத்தும் அடங்கும் .  ஒவ்வொரு வருடமும் ஒதுக்கப்பட்ட நிதிக்கான கணக்கை மத்தியில் சமர்பிக்கவேண்டும்.  தவறும் பட்சத்தில் நிதி குறையும்/வராமலும் போகலாம்.  

2014- 2015 ஆம் ஆண்டு SSAவிற்கான மத்திய ஒதுக்கீடு கிட்டத்தட்ட 1.2ஆயிரம் கோடி. மீதம்  மாநில அரசு ஒதுக்கியது.(65:35).  ஆசிரியர்களின் சம்பளம் இதில் முக்கியமான பங்கு. எனவே  இதெல்லாம் திட்டமிடாத பட்ஜெட் பகுதியில் வருகிறது. SSA திட்டம் நிறுத்தப்பட்டால் இதெல்லாம் அரசின் சுமைகளில் சேரும்.

உயர்நிலைக்  கல்விக்கான நிதி உதவிகள்   Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) திட்டம், (2009ல் தொடங்கப்பட்டது),  Rashtriya Uchchattar Shiksha Abhiyan (RUSA) (2013ல் தொடங்கப்பட்டது ) திட்டங்கள் மூலம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இவைகளுக்கும் கணிசமான வெளிநாட்டுத் தொகை வருகிறது. இதுபோல 22 திட்டங்கள் மத்தியில் இருந்து இயக்கப்படுகிறன.  

"அனைவருக்கும் கல்வி " திட்டத்திலும் நம் மாநில அளவில் குளறுபடிகள் உள்ளன. இதுபற்றி பின்பு காண்போம்.

தரவுகள் : விக்கிபிடியா, மத்திய மாநில அரசு கல்வி/பொது நிதி மற்றும் SSA பொது/தணிக்கை அறிக்கைகள்.