Friday, July 15, 2016

காடோடி - நக்கீரன்

 வரலாறோ பூகோளமோ, மேற்கைப் படித்த அல்லது படிக்க வைத்த அளவு நாம்  கிழக்கைப் படிக்கவில்லை என்பது நிதர்சனம். பூமத்திய ரேகையை ஒட்டிய தென் கிழக்கு ஆசியாவில் இரு(க்கும்)ந்த   அடர்ந்த வெப்ப மண்டல மழைக்காடுகள் காங்கோவையும் அமேசானையும் விட எந்த வகையிலும் சளைத்தவை இல்லை.

பல அறிய ஆதி உயிரினங்கள், ஓரிட வாழ்விகள், தொல்குடி மக்கள் கொண்ட  போர்னியா தீவுகள்/காடுகளுக்கு கடவுச் சீட்டில்லாமல் காடோடியோடு ஒரு பயணம். நம்மைப்போல ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டு  சுரண்டல்களுக்கும் சூறையாடல்களுக்கும் உள்ளாகி பின்னர்  மலேசியா இந்தோனேசியா என தூண்டாடப்பட்ட இயற்கையின் கொடை  நிலங்கள் தாம் இவை. இக்காடுகள், அவை கொண்ட உயிரினங்களின்   (தொல்குடி மனிதர்கள் உள்பட) குண நலன்கள்  வாழ்வியலையும் விவரித்து  அவற்றையெல்லாம் எவ்வாறு இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே காடோடி.



காடு குறித்த தகவல்களையெல்லாம் திரட்டி ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிடாமல், அதில்  சில தேர்ந்த பாத்திரங்களை  வாழவைத்து  உயிரோட்டமுள்ள, சொற்களஞ்சியம் நிறைந்த புனைவாக வழங்கியிருக்கிறார் ஆசிரியர். ஒரு புத்தகத்தின் தாக்கம் நம்  சிந்தனைகளைப்  புரட்டி போட்டு யோசிக்கவைப்பதில் இருக்கிறது. அந்த வகையில் முடித்து இரெண்டு நாட்காளாகியும் பிலியவும், ஜோஸும், மூதாய் மரமும் என் தலைக்குள்ளேயே கூடாரம் அடித்து உக்கார்ந்திருக்கிறார்கள். சங்கிலி வாளின் இரைச்சல் இன்னும் காதுகளில்  ஒலித்துக்கொண்டிக்கிறது.

 முழு நீளத் திரைப்படம் எடுக்க அனைத்து அம்சங்களும் கொண்ட கதை. ஆனால் கதை நகரும் காடுகள் சிறிதளவாவது இருக்குமா அல்லது  செயற்கை அட்டைக்காடுகளும் கணினியும் கொண்டே எடுப்போமா என்பது மனிதர்கள்  முடிவு செய்யவேண்டும் 

அக்காடுகளுக்கு ஈடாக இல்லையானாலும் நம் மேற்குத் தொடர்ச்சி மழைக்காடுகளுக்கு என்ன நிலைமை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.வெகு சொற்ப காலமே வாழ்ந்துவரும்   மனித இனம் உலகுக்கு என்ன செய்து தன்னையும் அழித்துக்கு கொண்டிக்கிறது என்பதை உணர கானகத்தோடு    பேசினால் புரியும். இயற்கை ஆர்வலர்கள் காடோடிகளும் தவறாமல்  வாசிக்க வேண்டிய காட்டின் ஆன்மா- காடோடி.

காடோடி - நக்கீரன்
பக்கங்கள் : 340
அடையாளம் பதிப்பகம்