Wednesday, September 25, 2013

நீயும் பெண்தானோ?

வெகு சாதாரணமான ஒரு நாளின் முடிவில்,  முற்றும் யோசனைகளோடும் உணர்ச்சிகளோடும் பல காலம் வசிக்கும் தெருவில் அனிச்சையாய் வண்டியைச் செலுத்தி வீட்டினுள்  சென்று செருப்பைக் உதறி உடை மாற்றி முகம் கழுவி , தாய்மடி சாய்ந்து அன்றைய உணர்வுகள் எதுவோ மகிழ்வு, கோபம், துக்கம், வீரம், கையாலாகாத தனம், அழுகை என  எல்லாவற்றயும் கொட்டிவிட்டு, அக்காவுடனோ தங்கையுடனோ சண்டையிட்டு விளையாடி, பாட்டியிடம் கதைகேட்டு நிம்மதியாய் உறங்கச்  செல்வோம்.

சரி, இதனால் என்ன என்ற கேள்வியா? விட்டு விடுங்கள்.இந்நிகழ்வுகளை பிறகு மீண்டும் கிளறுவோம்

உபரியாய் இருக்கும் எதன் மீதுமே நாம் கவனம் செல்வது இல்லை. பெரும் கண்டங்களை இணைத்து பிரம்மாண்டமாய் இருந்தாலும் , பூமிப் பந்தில் மூன்றில் இரண்டு பங்கு நீரே என்று படித்ததாலோ என்னவோ எனக்கு நீர்நிலைகளின் மேல் பிரியமே இல்லமல் இருந்தது.

அதிகம் வெயிலை மட்டுமே பார்த்த பகுதியில் வளர்ந்து எப்போதாவது கடலை அரிய காட்சிப் பொருளாகக் கண்ட எனக்கு சென்னை வாசம் வழக்கப் படுத்திய ஒரு இடம் கடல். குறிப்பிட்டுச் சொன்னால் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை.



வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது ரொம்பவே வசதி. இரண்டு வருட சென்னை வாசத்தில் வீட்டுக்கு வெளியே அலுவலகம் தவிர்த்து அதிகம் காற்றில் என் சுவாசம் கலந்த பகுதி அதுவே எனலாம்.அதிகாலை விழிப்போ, நேரம் சென்ற இரவுத்தூக்கமோ கடற்கரை இல்லாமல் இருந்த்தாய் ஒரு நாள் கூட நினைவு இல்லை.

ஆரம்ப காலத்தில்  சுடராய் இருந்த கடலாசைக் கொள்ளியில்  வெகுவாய் எண்ணெய் ஊற்றிய பாவம் பொன்னியின் செல்வன் வழியாக கல்கியைச் சேரும்.சிவகாமியின் சபதம் கூட. சோழர்களையும்  பல்லவர்களையும் ஆட்கொண்ட கடல் என்னையும் விடுமா என்ன?


 

நட்புகளைச் சந்திக்க ஓர் இடமாய் அறிமுகமாகி பின் பல நாட்கள் தனியே நள்ளிரவில் காவலர் விரட்டும் வரை மணிக்கணக்கில் கடலையே வெறித்த கணங்கள் உண்டு.

அலையோசை மட்டுமே எஞ்சி இருக்கும் அந்நேரத்தில் சொற்ப  மனிதர்களோ அல்லது யாருமே இல்லாத வங்காளக்கரை மணல் பரப்பை நிலவொளியில் அதிகம் கண்ட பாக்கிய நாட்கள் எண்ணிலடங்கா.
 
தனியே காயும் நிலா மகளையும் நட்சத்தரங்களையும் வெற்று மணலில் மல்லாக்கக் கிடந்து ரசித்த மணிகள்.

 ஆமை நடை ( Turtle walk) என்று ஆமை முட்டைகளைப்
 பாதுகாக்க விடிய விடிய கடலோரம் நடந்த இரவுகள்.

சூரிய உதயம் கண்டு, பின் சிப்பிகள் பொறுக்கி,  பொந்துகளில் ஓடி மறையும் நண்டுகளை விரட்டிய காலைகள்




கடலும் காதலியும் மட்டுமே எப்போதும் சலிக்காமல் பார்க்கப் பார்க்க புதிதாய்த் தோன்றும் என்பார்கள். இவ்விரண்டில் என் கடல் அனுபவம் மிகப் பரிச்சயம்.





2012 அக்டோபர், " நீலம்" சூறாவளி தமிழ் நாட்டின் பல பகுதிகளில் சூரையாடிக்கொண்டிருந்த சமயம், புயலின் மையம் சென்னையைத் தாக்கி கரையைக் கடக்கும் என்று செய்தி.விடாத மழை, காற்றின் வேகத்தில் முன்னேற முடியாத வாகனங்கள், சாயும் மரங்கள். இச்சூழலில் கடலைத் தனியாய்த் தத்தளிக்க விட மனமில்லாமல் துணைக்குச் சென்றேன்.வெளியே தடுத்து நிறுத்திய காவலர்களின் கண்ணில் மண்ணைத் தூவி உள்ளே சென்றால் புயல் ஈர மணலை முகத்தில் வீசி வரவேற்றது. பாதி மணல் பரப்பு வரை அலை பாய்ந்தது.

அங்கே எனக்கு முன்னால் இரண்டு பேர் தேவுடு காத்துக் கொண்டிருந்தனர். "புயல் நேரத்துல பீச்சுக்கு வந்திருக்காய்ங்க பாரேன், ஏதோ பைத்தியம் போல" என்று எண்ணி நானும் சேர்ந்துகொண்டேன். நேரம் சென்று காவலர்கள் வந்து விரட்ட வெளியே வர வேண்டியதாயிற்று. அங்கு ஒருவர் மனைவி, சிறு மகன் மகள் சகிதம் காரில் வந்திறங்கி விழா வேடிக்கை காட்டிகொண்டிருந்தார்.ரசனைக்கார குடும்பம் போல.

2012 நில நடுக்கம். சரியாக மாலை ஐந்து மணி பத்து நிமிடத்திற்கு சென்னையை சுனாமி தாக்கும் என செய்தி கண்டதே தாமதம். வேகமாக கடலுக்கு விரைந்தால், சாந்த சொரூபியாய் ஒரு காட்சி.ஏமாற்றம். சுனாமி வரவில்லை.


கொஞ்ச நாட்களில் உடனிருந்த நண்பர்கள் வேறு ஊர்களுக்குச் செல்ல, எங்கிருந்தோ பிழைப்புக்காக வெகு தோரம் குடும்பத்தை விட்டு வந்து ஆயிரமாயிரம் கனவுகளுடன் திரிபவனுக்கு கடலன்றி வேறு யார் துணை?

மீண்டும் முதல் பத்திக்குப் போகலாம்.

வேலை நேரமும் நாளும் முடியும் நேரத்தில் அனிச்சையாய் கரைக்கு வந்து. கடல் மடியிலே உணர்ச்சிகளைக் கொட்டி, நீரில் கால் நனைத்து விளையாடி, அலையோசைக் கதைகள் கேட்டு, பின் உறக்கம்.



இன்றும் சென்னை சென்று இறங்கும் ஒவ்வொரு அதிகாலையும் கடல் மடியிலேயே உதயம். தினசரி விஜயம். பின் வேலை முடித்துக் கிளம்பும்போது மனதில் ஏதோ ஒரு இனம் புரியா பாரம் ஏறும். வழியனுப்பி வைக்க வரும் நண்பன், "எந்த வழியா பஸ் ஸ்டாண்ட் போகலாம்?" என்றால் "பீச்சுக்கு போய்ட்டு அப்டியே போலாம் " என்றே பதில் ஆகிறது

"நதியே நீயும் பெண் தானோ" என்றார் வைரமுத்து.சிலர் அன்னையென்று கூட அழைப்பர். தாயாய், தங்கையாய் , தோழியாய், யாதுமாய் இருக்கும் இவளை யான் எங்கனம் அழைப்பது? 

Monday, January 21, 2013

லிட்டில்ஸ்

நம் நாட்டின் தற்போதைய முக்கியத் தேவை கல்வி. அதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, கிராபப்புற  குழந்தைகள் கல்வி மற்றும் நலன் எவ்வளவு அவசியம் விளக்கத்தேவையில்லை. இது குறித்து இயங்கி வரும் லிட்டில்ஸ் ட்ரஸ்ட் பற்றிய பதிவு இது.பதிவின் நீளம் குறித்து கவலை வேண்டாம்.முதல் சில பத்திகள் என் சொந்தக் கதை.  முக்கியப் பகுதியை அடைய ஒன்பதாவது பத்திக்குச் செல்லலாம் அல்லது இங்கே சொடுக்கலாம்.

எனது சகோதரன் பயன்படுத்திய பத்து - பனிரெண்டாம் வகுப்பு புத்தகங்கள் ,
விளக்க உரைகள், வினாத் தொகுப்புகள் ஆகியவற்றை வாங்க இயலாதவர்களுக்கு கொடுத்து விடலாம் என்று தோன்றியது. மதுரையில் சமூக சேவை நிறுவனங்கள் பற்றி ஏதும் தெரியாது. டிவிட்டரில் AID India செல்வகணபதியை( @aidselva ) கேட்கலாம் எனத் தோன்றியது. Eureka child foundation மூலம் தமிழகத்தின் பல பகுதிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு கல்விச் சேவை அளிப்பதில் இவர் ஈடுபட்டிருப்பதால் இந்த யோசனை.

"Kindly contact Vardini of Littles" என்றார். அடுத்த முறை மதுரை செல்லும் போது பேசலாம் என்று குறித்துக்கொண்டேன்.

லிட்டில்ஸ் என்றதும் நர்சரி ஸ்கூல் பெயர் போல இருந்தது. ரொம்ப யோசிக்கவில்லை.நான்கு நாள் பொங்கல் விடுமுறைக்காக வீட்டுக்கு போனபோது முதல் நாளே திருமதி. வர்தினியிடம் போனில் பேசினேன். SS காலனி பக்கம் தனக்கு வேலை இருப்பதால்  தானே வந்து புத்தகங்களை பெற்றுக்கொள்வதாகக் கூறினார். என்னிடம் இருந்தவை  எல்லாம் ஆங்கில வழிக் கல்வி புத்தகங்கள். அவை பயனளிக்காது என்பதால் பொதுவான தமிழ் மற்றும் ஆங்கில மொழிக்கான பாடப் புத்தகங்களை மட்டும் உதவும் என்றார். இயலாக் குழந்தைகள் தமிழ் வழிக் கல்வி பெறுவதே பெரிய விஷயம் என்பது உரைத்தது. 


அன்று சில வேலைகள். மறந்துவிட்டேன். எனது பெயரை நினைவில் வைத்து மறு நாள் காலையில் வர்தினியே அழைத்தார். வேலை காரணமாக தன்னால் வர முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார். எவரோ ஒருவர் திடீரென்று அழைத்து சில புத்தகங்கள் உள்ளன என்று கூறினால் அதை நினைவில் கொண்டு மறுநாள் அழைத்தது எனக்கு சற்று ஆச்சரியம்.

லிட்டில்ஸ் என்பது என்னவாக இருக்கும் ? குழந்தைகள் காப்பகம்? பள்ளிகூடம்? சின்ன விஷயத்திலும் இவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை? கூகுளை நாடினேன்.சில சுட்டிகள் கிடைத்தன ( இறுதி இணைப்பில் உள்ளன).

நேரில் போய் பார்த்து விட வேண்டும் எனத் தோன்றியது. அன்றும் மறந்தேன். மறு நாளும் அவரே அழைத்தார். நாளை கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என முடிவு செய்து எனது மறதியை திட்டிக்கொண்டே முகவரி கேட்டேன்.

அன்று பொங்கல். போகலாம் எனக் கிளம்பி எதற்கும் கேட்டுவிடுவோம் என்று அழைத்தேன். " தாராளமா வாங்க volunteers இருக்காங்க " என்றார்.

நாகமலைப்புதுக்கோட்டை. மதுரையை அடுத்து தேனி மார்க்கத்தில் ஒரு ஊராட்சி. மதுரையைப் பொருத்தமட்டில் சில முக்கியமான பள்ளிகளும் ஒரு கல்லூரியும் உள்ள இடம்.

வண்டியைச் செலுத்தி சாலையிலிருந்து விலகி சற்று உள்ளே இருக்கும்
வீட்டை அடைந்தேன். உபசரித்தார்கள். அவரவருக்கு சொந்த வேலை இருந்தாலும் இரண்டு இளவயது மகன்கள், கணவர் என குடும்பமே இதில் இணைந்து பணியாற்றுவது எனக்கு ஆச்சரியம்.சொந்த வீடு என ஊகிக்கிறேன்.

சற்று விசாலமான ஓடு வேய்ந்த மாடி . இதுவே லிட்டில்ஸ் டிரஸ்டினுடைய தலைமை. திருமதி. பர்வத வர்த்தினி அதன் Managing Trustee. 2002 ல் தொடங்கியிருக்கிறார்கள்.அந்தப் பகுதியில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு மாலை நேரபடிப்புக்கான ஒரு இடம்.

புத்தகங்கள் சிலேட் ,நோட்டுகள், விளையாட்டுச் சாமான்கள் ,கரும்பலகைகள்,சிறுவர்கள் வரைந்த ஓவியங்கள் என பள்ளிக்கூடம் போலவே இருந்தது. 20 - 40 குழந்தைகள் தினமும் பயில்வதாகக் கூறினார். பள்ளிப்பாடம் போக Embroidery, நாடகக் கலை போன்றவயும் கற்றுத்தரப் படுகின்றன. அவ்வப்போது கலை நிகழ்சிகளும் நடத்தப்படுகின்றன.

கற்றல் குறைபாடு (Dyslexia) உள்ள குழந்தைகளுக்கு வார இறுதியில் அதிக கவனப் பயிற்சி அளிக்கப்படுகிறது.வீட்டில் படிக்க சரியான சூழ்நிலை அமையாமை, குடிக்கும் சண்டையிடும் பெற்றோர் போன்ற காரணங்களால் குழந்தைகள் ஆர்வத்துடன் வருவதாக கூறினார்.

இரண்டு முழு நேரப் பயிற்றுனர்கள்  இருந்தார்கள். இது போக  நேரில் சென்று நிர்வகிக்கக் கூடிய 2-3 கி.மீ வட்டத்தில் 12 கிராமங்களில் இது போன்றதொரு அமைப்பை அந்தந்த ஊர் மக்களைக் கொண்டே நடத்தி வருகின்றார். இடம் மற்றும் பாதுகாப்புக் காரணங்கள் கருதி அவ்வூர்களில் புத்தகங்களை குழந்தைகள் தங்களுக்குள் சுழற்சி முறையில் எடுத்துச்  செல்கின்றன.
சிறு வயது முதலே தொடர்ந்து  வரும் குழந்தைகளை நன்கு புரிந்து கல்வி மற்றும் நல்ல சமூக பழக்க வழக்கங்களை கற்றுத்தர முடிவதாகக் கூறினார். ஒரு சில பத்து பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இரவு நேரங்களில்  படிக்கவும் வசதி செய்துள்ளனர்.

நன்கொடை அளிப்போர் நிலையைப் பொருத்து சீருடைகளும் புத்தகங்களும் வழங்கப்படுகின்றன. குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வோரும் உள்ளனர் என்றும், ஒருவர் ஒரு மாணவியின் பொறியியல் படிப்புச் செலவு வரை ஏற்றிருபதாகவும் கூறினார்.
இவ்வாறு அன்றாட வேலைகள் போக மிக முக்கியமாக சட்ட சிக்கல்கள் நிறைந்த  பிரச்சனைகளையும் கையாள்கிறார்.வாழ்க்கையின் முக்கிய நேரமான  பதினான்கு முதல் பதினெட்டு வயது வரை இருக்கும் வளர் இளம் பருவத்தினரைக் காக்க சட்டத்தில் எந்த அமைப்பும் இல்லை என்றும், இதனால் அவர்களை எளிதில் கொத்தடிமைகளாகவோ, தீய வழிகளிலோ  பயன்படுத்துவது எளிது என்கிறார். CRY India foundation இச் சட்ட வரைமுறைகள்   வகுக்க முயல்வதைத்   தமிழக அளவில் இவர் நடவடிக்கை மேற்கொள்கிறார் .

சுமங்கலித் திட்டம் என்று கூறி  மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு கொத்தடிமைகளாக பஞ்சாலைகள் போன்ற இடங்களில் வேலை வாங்கி இறுதியில் முப்பதாயிரமோ நாற்பதாயிரமோ கல்யானச்  செலவுக்கு கொடுக்கும் அவலங்கள் அல்லது இரண்டு வருடங்கள் வேலை வாங்கி  விட்டு மூன்றாவது வருடத்தில் பாலியல் தொல்லை போன்ற செயல்கள் மூலம் பணம் ஏதும் தராமல் விரட்டிவிடுவது போன்ற செயல்களை எதிர்த்து இருக்கிறார்.

இவ்வாறு கொத்தடிமைகளாக இருப்பவர்களை மீட்பது,  பள்ளிக்கட்டணங்கள் வசூலிப்பதில் ஏற்படும் முறைகேடுகளை எதிர்ப்பது, சிறு வயதில் பாலியல் கொடுமைக்கு ஆளாபவர்களைக் காப்பது போன்ற செயல்கலளுக்கு சில சட்ட வல்லுனர்களும் உதவி  வருகின்றனர் .

பாதிக்கப்பட்ட அல்லது  அவசர மருத்துவ உதவிகள், உளவியல் சிகிச்சைகள்  தேவைக்கேற்ப நிறைவேற்றப்படுகின்றன. மதுரை போஸ் மருத்துவமனையில் போதிய உதவி கிடைப்பதாகத் தெரிவித்தார்.
இருப்பதைக் கொண்டு எவ்வளவு செய்ய முடியுமோ செய்கிறோம் என்றார்  பெரிய அளவில் இழுத்துப்போட்டு சொதப்பாமல் செய்வன  திருந்தச் செய்கின்றனர்

என்னை கவர்ந்த ஒரு விஷயம், நான் கண்ட வரை குழந்தைகள்  புழங்கும் அந்த இடத்தில் எந்த ஒரு மத/சமூக/மனிதரின்  அடையாளமும்  இல்லை. சில தேசத் தலைவர்கள் படம் மட்டும் கண்டேன்.
பேசிக்கொண்டிருந்த போதே ஒரு சிறுமி  அழகாய்எட்டிப்பார்த்தாள். தந்தை இல்லாத அவளுக்கு எங்கோ பக்கத்தில் ஆட்டுக் கொட்டகையே வீடு. " பொங்கல் செஞ்சிங்களா ? " என்று கேட்டு பதிலுக்குக் காத்திராமல் "வா தர்றேன் வீட்டுக்கு கொண்டு போ " என்று அழைத்துச் சென்றார்.

நாட்டில் எவ்வளவோ நாச வேலைகள் நடந்து வந்தாலும் இது போன்ற சிலர் இருக்கவே செய்கின்றனர்.  நிறையத் தேவையும் கூட.

தொடர்புக்கு :
Little's Trust,
7/126 , Venkatraman Nagar,
N.G.O colony, Nagamalai Pudukkottai.
Madurai - 625019
0452-2459506
9443856061.