Friday, August 22, 2014

நிலமெல்லாம் ரத்தம் - பா ராகவன்

 இணையம் பற்றிய ஒரு பொதுவான கருத்து இங்குள்ள அனைவரும் நுனிப்புல் மேய்கிறனர், ஆழ்ந்த வாசிப்பு குறைந்துவிட்டது போன்றவை. என்னளவில் இது தலைகீழ். நிறைய இல்லையென்றாலும், என்னைப் புத்தகங்களுக்கு அறிமுகம் செய்து கொஞ்சமேனும் வாசிக்க வைப்பதில் பெரும்பங்கு வகிப்பது இணையம் தான்.  ஜெமோ, சாரு, இலக்கியம், பின் நவீனத்துவமெல்லாம் எனக்கு  ரொம்ப தூரம். பெரும்பாலும் Non - fiction வகையறாக்களே எனது விருப்பம். அதிஷா (athishaonline.com) அவ்வப்போது சில புத்தக அறிமுகங்கள் , பரிந்துரைகளை அவரது ப்ளாக்கில் செய்கிறார். எல்லோரும் இது போல செய்தால்  என் போன்றோருக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும்.


விஷயத்துக்கு வருகிறேன்.வரலாறு தெரியாதவன் அழிந்து போவான் என்று ஒரு கூற்று உண்டு. வரலாறெல்லாம் எனக்குப் பத்தம் வகுப்போடு முடிந்த வஸ்து.  இஸ்ரேல் - பாலஸ்த்தீன் விவகாரம், விவரம் தெரிந்த நாளிலிருந்து கேள்விப்படும் ஒரு விஷயம். உண்மையில் இது நாள் வரையில் இதன் மீதான எனது புரிதல் என்பது உலக வரைபடத்திலோ ஏன் மத்திய கிழக்கு வரைபடத்தயே காட்டினாலும் இந்த இடங்கள் சரியாக எங்கு உள்ளன என்று காட்டத் தெரியாது. யாசிர் அராபத் பெயரைத் தாண்டி ஏதும் தெரியாது. அங்கு நடப்பது என்ன என்றும் தெரியாது. ஆனாலும் பார்ப்பதை, கேள்விப் பட்டவைகளை வைத்து அபிப்ராயங்கள் கொண்டு கருத்துக்கூறவும் முற்பட்டிருக்கிறேன் எனபதைக் கரும சிரத்தையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


  
சமீபத்தில் (எந்தக் காலத்தில் படித்தாலும் இந்த  விஷயத்தில் "சமீபத்தில்" என்ற வார்த்தை பொருந்திப் போகும் வாய்ப்புகள் அதிகம் ) நடந்த காஸா தாக்குதல் இது பற்றி  தெரிந்து கொள்ளத் தூண்டியது. இணயத்தில் நிறைய ஆனால் அரைகுறையன தகவல்களே சிக்கின.கிடைத்திதெல்லாம் படித்தாலும்  திருப்தி இல்லை.  இதுசமயம் என் தந்தையின் தோழர் ஒருவர் வீட்டிற்குப் போனபோது முதல் சந்திப்பிலேயே சில  பரிந்துரைகள் செய்து புத்தகங்களையும் கொடுத்தார். அதில் ஒன்று "நிலமெல்லாம் ரத்தம்". "When the Student is ready, the teacher appears" என்பது பதம். பா ராகவன் தோன்றினார். 

ஆங்கிலத்தில் கூட இப்படி ஒரு புத்தகம் இருக்குமா என்பது சந்தேகம். சத்தியமாக தமிழில் இது போன்ற ஒன்றை நினைத்துக் கூடப்பார்க்கவில்லை. எழுநூறு பக்கங்களில் சரி பார்க்கப்பட்ட, தெள்ளத் தெளிவான, அதுவும் போர் அடிக்காமல் படிப்பவரைக் கட்டிப் போடும் நான்காயிரம் ஆண்டு வரலாறு. ஆபிரகாம் என்ற மனிதர் தொடங்கி 2005 ஆம் ஆண்டு வரை.
மொத்த உலக நடப்புகளும், முக்கியமாக ஐரோப்பிய வரலாறும் இந்த விஷயத்தில் எவ்வளவு பங்கு வகித்திருக்கிறது என்பது படித்தால்  விளங்கும். பத்து, நூறு, ஆயிரங்கள், லட்சங்கள் என்று கணக்கு வழக்கில்லாமல் உயிர்களைக் காவு வாங்கி ரத்த ஆறு ஓட விட்ட ஒரு வரலாறு. மதம், இனம், மொழி, பொருளாதாரம், அரசியல், சூழ்ச்சிகள், வல்லரசுகளின் நாட்டாமை என்று எதுவெல்லாம் மனிதத்துக்கு எதிராக சதி செய்யுமோ அத்தனையும் சேர்ந்ததொரு சிக்கலான நீண்ட கதை.
மறதி ஒரு தவிர்க்க முடியாத வியாதி என்றாலும் இந்த விஷயத்தில் ஒரு சாபமே. சமீபத்தய வரலாறு கொண்டு எதையுமே கணிக்க முடியாது. யூதர்களை நாடு நாடாக ஒட ஒட விரட்டி கொன்ற வரலாற்றில் இருந்து  அரபியர்கள் வஞ்சிக்கப்பட்டு  சொந்த மண்ணில்  அகதியாகி துப்பாக்கி ஏந்தும் நிலைக்கு எவ்வாறு தள்ளப்படார்கள் என்று படித்தால் எல்லாம் வியப்பே. மற்ற தீவிரவாத இயக்கங்களைப் போல இவர்களும்  வல்லரசுகளால் முத்திரை குத்தப்பட்டாலும் மண்ணின் மைந்தர்களுக்கு இவர்கள்  போராளிகளே என்பதை விளக்குக்குகிறார்.
சரியானதொரு தலைமை இல்லாதது, சகோதர அரபு நாடுகள் அமைதிகாப்பது, கல்வி இல்லாமை, எண்ணை வளமும் இல்லாமல் போன ஒரு பொருளாதாரம், தினம் தினம் யுத்தமே வாழ்க்கை என்று இறங்கு முகமாகவே பாலஸ்தீன். இஸ்ரேலின் அரசு நேர்த்தி, அமெரிக்க ப்ரிட்டன் ஒத்தூதுதல் , உலகின் தலை சிறந்த உளவு நிறுவனமான அவர்களது மொசாட் இயக்கம்  என பல பல தகவல்கள்.

ஜெருசலேம் - ஆபிரகாமிய மும் மதங்களுக்கும் புனிதத் தளம். பிரச்சனையின் ஆதிமூலமே இங்கு தான். அங்கு என்ன இருந்தது, இருக்கிறது என்று ஏன், எதற்கு எப்படி எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கிறார்.
எல்லா இடங்களிலும் தகவல்கள் மட்டுமின்றி  அதிலிருந்து அறிய வேண்டிய கருத்துகளயும் புரியுமாறு விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
நம் நாடு மட்டுமல்லாமல் ப்ரிட்டன் பல நாடுகளைக் குடிமுழுக வைத்தது தெரிந்த விஷயமே. பாலஸ்த்தீனில் அவர்கள் அடிமடியிலேயே கைவைத்தது எப்படி என்பது படித்தால் விளங்கும்.   
புல்லரிக்க வைக்கும் ஹிட்லரின் பக்கங்களும், உணர்ச்சி மிக்க அராபத்தின் சரித்திரப்  பக்கங்களும் அவ்வளவு எளிதில் மனதை விட்டு அகலாது. 
நிச்சயமாய்த் தமிழில் இது ஒரு அரிய படைப்பு.  இவ்வளவு தகவல்களையும் சரி பார்த்து, தொகுத்து சார்பில்லாமல் எழுதுவது என்பது அளப்பரிய காரியம். ஆசிரியர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்
குமுதம் ரிப்போர்ட்டரில் ஒரு வருடம் வெளிவந்த தொடரை ஒரே மூச்சில் படித்து முடித்தது விளக்க முடியாத உணர்வுகளைத் தருகிறது.
ஒப்பிடவே முடியாவிட்டலும் நம் நாட்டில் எவ்வளவு சுதந்திரமும், சுகங்களையும் அனுபவிக்கிறோம் என்பது வேற்று நாட்டு நடப்புகளைப் படித்தால்தான் புரிகிறது. இருந்தாலும் நாம் போக வேண்டிய தூரம் அதிகம்.
பாலஸ்த்தீன் பிரச்சனை மட்டுமல்ல உலகில் மனிதம் எப்படியெல்லம் வஞ்சிக்கப்படது வஞ்சிக்கப்படுகிறது என்று அறிய விளையும் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி பா. ராகவன்

புத்தகம் : நிலமெல்லாம் ரத்தம்
ஆசிரிய‌ர் : பா.ராகவன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 704
https://www.nhm.in/shop/978-81-8368-090-5.html