Saturday, November 14, 2015

டாலர் தேசம் - பா.ராகவன்

முதலாக மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு புத்தகத் திருவிழாவில் பார்த்தது. அப்போது வரலாற்றில் பெரிய ஆர்வமும்  இல்லை. பிறகெங்கு அரசியல் வரலாறெல்லாம் படிப்பது அதுவும் அமெரிக்காவுடையது ? முடிந்தது. 



சென்ற ஆண்டு வேறொருவரின் பரிந்துரையின் பேரில்    "நிலமெல்லாம் ரத்தம்"(இஸ்ரேல்- பாலஸ்தின்), பின் அதே சூட்டில் "ஆயில் ரேகை (வளைகுடா)" யும் முடித்தபோது அமேரிக்கா புரியாமல்  வளைகுடா வரலாறும் முழுமையாகப் புரியாது என்று தெரிந்தது. 

அடுத்து என்ன என்று பார்த்தால் " டாலர் தேசம் ". விலையும், சைசில்  புத்தகமும் சற்று பெரியதாகப் பட்டது . 850+ பக்கங்கள். அடுத்து வாய்ப்பிருந்தால் நிச்சயம்  படிக்க வேண்டும் என்று உத்தேசம்.
 
அதன் பிறகு சோழர்கள் , ஹிட்லர், திப்பு சுல்தான், மொகலாயர்கள் , மராட்டியர்கள், பிரிட்டன் என்று சில புத்தகங்கள் உருண்டன." போர், புரட்சி  " என்னும் ஒரு நிகழ்வுகள்  வார்த்தையளவில் ரொம்ப பழக்கப் பட்டது போல் ஆயிற்று. இடையே இந்த " உற்பத்தி " , அன்னியச் சலாவணி ", "பங்கு",  "வர்த்தகம்" , "பண வீக்கம் " , " வேலை வாய்ப்பு ", "தொழில் துறை ", "வங்கி" போன்ற அடிப்படைப் பொருளாதார வார்த்தைகளளின் இணைப்பு சற்று புரிய ஆரம்பித்தது. சுற்றிச்  சுற்றி  கடைசியில் எல்லாமே அரசியலையும் பல சமயங்களில் டாலரையும் நோக்கியே சென்றது. 

சரி, படித்து விடலாம் என்று வாங்கியாயிற்று. புத்தகத்தின் சைஸை பார்த்தால் சற்று மலைப்பாகத்தான் இருந்தது. வரிகள் மறைந்து போய், பக்கங்கள்  திரும்புவது தெரியாமல் மனக்கண்ணில்  நாமும் நிகழ்வுகளோடு ஓடிக்கொண்டிருப்பது ஒரு நாவல் வாசிப்பில் நிகழலாம். வரலாற்றையும் இவ்வாறு படிக்க ராகவனைத்தான் தேடவேண்டும்.  எழுத்தும் நடையும் அப்படி.

 நானூறு ஆண்டுகளுக்கு முன் அமேரிக்கா என்னும் நாடே இல்லை. ஆனால் கடந்த நூறு வருடங்களில் அமெரிக்கா இல்லாமல் உலக வரலாறே இல்லை.   உலக நாட்டாமை, உலக போலீஸ், தொழில்நுட்ப , ராணுவ, வர்த்தக ஏகாபத்தியம் என்று பல ரோல்கள். அவர்கள் வரலாற்றைத் தொடர்ந்தால் 20ஆம் நூற்றாண்டுலகின் முக்கிய நிகழ்வுகள், நாடுகள், மனிதர்கள் எல்லாவற்றயுமே படிக்க முடிகிறது.

அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பிசினஸ், பிசினஸ் பிசினஸ். மட்டுமே. . ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் , சாப்ட்வேர் , சில்லறை வர்த்தகம் என்று எல்லாமே பெரு  முதலாளிகள் , அமெரிக்க அரசாங்கம் அவர்களுக்கு மேலே முதலாளிகளுக்கெல்லாம் முதலாளி. ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு என்ன வெளியுறவுக் கொள்கை  இருக்குமோ அதே போன்றதொரு தேசக் கொள்கை.

ஒரு நாடு போரில் பங்கு பெறுகிறது என்றால் அதன் பொருளாதாரம் சுணங்கிப்  படுக்கும் அல்லது லேசான ஆட்டமாவது காணும் என்பது இயல்பு. அமெரிக்க இல்லாத போரே இல்லை. தென் அமேரிக்கா, ஐரோப்பா, வளைகுடா, ஆப்ரிக்கா , மேற்காசிய , கிழக்காசியா, கொரியா என மனித சஞ்சாரம் உள்ள எல்லாப்பக்கமும் சண்டைக்குப் போய் இருக்கிறார்கள்.முக்கால்வாசி இன்னொரு நாட்டுக்குள் வாலண்டியராக மூக்கை நுழைத்து பஞ்சாயத்து பண்ணியது. ஆனாலும் அதன் ராணுவ பட்ஜெட்  பல பில்லியன்கள்  கூடிக்  கொண்டே போகுதே தவிர உள்நாட்டு  சொகுசுக்கும் குறைவில்லை.


 புத்தகத்தின் தலைப்பைப் பார்த்த போது வித்தியாசமாகத் தெரிந்தது. அதென்ன "அரசியல் வரலாறு " ? வரலாறு என்று சொன்னால் மட்டும் போதாதா? யோசித்துப் பார்த்தால் அமெரிக்காவுக்கு என்று வேறு எந்த வரலாறும் கிடையாது. கலை, கலாச்சாரம், மொழி , மதம் என்று எல்லாமே இரவல் வாங்கியது அல்லது இல்லவே இல்லை. செவ்விந்தியர்கள் மன்னிப்பார்களாக.

ஏறக்குறைய  வாஸ்கோ த காமா இங்கு கால் ஊன்றிய போது  தான் கொலம்பஸ் அங்கு கால் ஊன்றினார். தொடக்கத்தில் அவர்களும் ஒரு பிரிட்டன் காலனி தான்.  என்ன ஒரு வித்தியாசம்,  அப்போது நம்மிடம் எல்லாமே இருந்தது , அவர்களிடம் ஒன்றுமே இல்லை . விடுதலைப் போராட்டம் , உலகின் முதல் ஜன நாயக நாடு என்று அதன் பிறகு அவர்கள் அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்த பாதை தான் "டாலர் தேசம் ". 

பத்தாண்டுகளுக்கு முன் வந்த புத்தகம். ஜூனியர் புஷ் சதாமை கொன்று 2005ல் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலை எதிர் நோக்கியதோடு முடிகிறது.   ஆனாலும் அமெரிக்காவைத்  தமிழில் புரிந்து  கொள்ள ஏதுவான புத்தகம்.

பதிப்பாளர்: மதி நிலையம்.