Friday, November 7, 2014

வந்தார்கள் வென்றார்கள் - மதன்



போன மே மாதம் முதன்முறையாக டெல்லி சென்ற பொது இரண்டு நாட்கள் தங்க வாய்ப்பு கிடைத்தது. என்னடா ஒரு பீச் கூட இல்ல, வெறும் மால்கள் , இவ்வளவு நெரிசல் என்று ஓரளவு நல்ல சிதோஷன நிலை கொண்டிருக்கும் பெங்களுரயே திட்டும் எனக்கு ஹிந்தியும் தெரியாமல் போனதால் அவ்வளவாக பிடித்தமே இல்லாமல் சம்பிரதயமாக பழைய தில்லி பக்கம் மட்டும் போய்விட்டு வந்துவிட்டேன். அநியாய வெயில் , கூட்ட நெரிசல், வேறு எங்கயாவது போகலாமா என்று நண்பனைக் கேட்டால் எல்லாமே ஏதோ முகலாய கல்லறைகள், பழைய கட்டிடங்கள், பூங்கா பெயர்களையும் கூறினான். ஒன்றும் புரியாததால் பெரிய நாட்டம் வரவில்லை. ஆக்ரா போகலாம் என்றால் நேரம் இல்லை. எப்போதோ படிக்கத்தொடங்கி விட்டுப்போன கார்டூனிஸ்ட் மதனின் மொகலாய ஆட்சி வலாற்றுப் புத்தகம் "வந்தார்கள் வென்றார்கள் " இந்த வாரம் முடிந்தது. யமுனை நதியின் கரையில் தேமேவென்று இருக்கும் இந்த ஊருக்கு உலக வரலாற்றில் எவ்வளவு மவுசு என்று இப்போது தான் புரிகிறது. பல நூற்றாண்டுகளாக எவ்வளவு சாம்ராஜ்யங்கள், படையெடுப்புகள், சூறையாடல்கள், குருதி ஆறுகள் என்று அனைத்தையும் கண்டு பீனிக்ஸ் பறவையாக நிலைத்திருக்கிறது ஆச்சிரியம் தான். ஆக்ராவில் ஏதோ தாஜ் மஹால் மட்டும் இருக்கிறதென்று தெரியும். அதன் வரலாரும் உணர்சிப்பூர்வமாகத்தான் இருக்கிறது. மத நல்லினக்கங்களில் அக்பரைப் புகழ்வது தெரியும். ஏழ்மைக் குடும்பத்தில் சிவாஜி ரஜினி போல் தெருவுக்கு வந்து பின் முயன்று ஈரான் முதல் வங்கம் வரை ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கட்டி ஆண்ட பாபரின் கதை மனதில் அப்படியே தங்கிவிட்டது. பள்ளி வரலாறுகளில் கொடூரனாகச் சித்தரிக்கப்படும் அவுரங்கசிப்பின் மறுபக்கம் எனப் பல தகவல்கள். கொடூரமான கொலைகள் , சகோதரச் சண்டைகள் , போர்க்களங்கள் என்று ஒருவாறாகப் போனாலும் சூரையாடல்களில் தொடங்கி பின் நல்லிணக்கம் கொண்டு மெல்ல சாம்ராஜ்ஜியத்தை வளர்த்து கலைகள் , ஓவியம், கட்டிடக் கலை என்று எல்லாவற்றையும் கண்டு வாழ்ந்துவிட்டுப்போயிருக்கிறார்கள். பிரிட்டிஷர்கள் தாஜ் மகாலை இடிக்க முயன்றது, பின் அதன் கதவுகள், உட்புறங்களில் இருந்த விலையுயர்ந்த ரத்தினங்கள் முத்துக்களை சொரண்டிக்கொண்டு போனது , தெற்கே செஞ்சிக் கோட்டை தஞ்சாவூர் கூட ஒரு காலத்தில் மோகலாயர்களின் கிழ் இருந்தது என்பது எனக்குச் செய்தி தான். குத்துப் மினார் முதல் தாஜ்மஹால் செங்கோட்டை, ஏன் தெற்கே ஔரங்காபாத் ஹைதராபாத்திலும் கலை வளர்த்திருக்கிறார்கள். புனைவு தான் என்றாலும் பொன்னியின் செல்வன் படித்ததும் அதில் வரும் சோழ வள நாட்டு இடங்களையும் கோட்டைகளையும் பார்க்க மனம் கண்டபடி தேடியது. இன்னும் போன பாடில்லை. (கல்கி குறிப்பிடும் பெரும்பாலான இடங்கள் இப்போது இல்லை எனத் தேடிப்போனவர்கள் எழுதியிருக்கிறார்கள் ). மீண்டுமொருமுறை அர்த்ததுடன் சந்திப்போம் டெல்லி!

Tuesday, September 30, 2014

"இது யாருடைய வகுப்பறை? "- இரா. நடராசன்


சில நட்புகளும், நல்ல புத்தகங்களும் நம் சுய, முன் அறிந்த கருத்துத் தளங்களை மாற்ற வல்லவை . அவற்றுள் சில புத்தகங்கள் நம் அன்றாட வாழ்வியல் சிந்தனைகளின் மீதே ஆளுமை கொள்ளும் . இவை பெரும்பாலும் அடிப்படை விஷயங்கள் குறித்து நாம் அறியாத வரலாறையோ, மறைக்கப்பட்ட , அப்பட்டமான, கேட்க விரும்பாத செய்திகள் , அது குறித்த ஆய்வுகள், நிகழ் சமூகத்தின் போலி முகமூடிகளைக் கிழிக்கும் மாற்றுச் சிந்தனைகளையோ தாங்கி வரும். அது பேசும் பொருளின் மீது நம்மை அறியாத ஒரு தேடல் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் பாலினம், பெண்கள் , ஆண்-பெண் சமூக நிலை மீதான புரிதல்களை மாற்றி, சிந்தனைகள், அதனூடான நிகழ்வுகளை நோக்கும் கோணங்களை என்னளவில் அடியோடு புரட்டிப்போட்டது சில வருடங்களுக்கு முன் வாசித்த மருத்துவர் ஷாலினி எழுதிய "பெண்ணின் மறுபக்கம்". புத்தகங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த காலகட்டத்த்திற்குப் பின் வெகு நாட்களுக்குப் பிறகு மற்றுமொரு அடிப்படை விஷயத்தின் மீதான கோணங்களை மாற்றியது இவ்வருடத்தின் பால சாகித்திய விருது வென்ற ஆயிஷா இரா. நடராசன் எழுதிய "இது யாருடைய வகுப்பறை? ". பிறந்ததிலிருந்து இறக்கும் வரை நாம் அறிந்தோ அறியாமலோ, வேண்டியோ வேண்டாமலோ எல்லா சூழ்நிலைகளிலும் தானாக நடக்கும் ஒரு நிகழ்வு கற்றல். மண்ணில் தோன்றி வெகு சொற்ப காலமே ஆயிருந்தாலும் மனித குலத்தின் அசுர வளர்ச்சிக்கு காரணம் கல்வியும், கற்றலுமே. புற்றீசல் போல உயர்ந்துவிட்ட கல்வித் தந்தைகளின் தயவில் இன்று நிகழும் கல்வி முறையின் மீதும், ஆசிரிய - மாணவ உறவுகளின் மீதும் கருத்துக் கூறும் நம்மில் எத்தனை பேர் அவைகளின் பரிணாமும், இன்று ஏன்  இவ்வாறு இருக்கிறதென்ற வரலாறையும்  பற்றி சிந்தித்திருக்கிறோம் ? . முதல் பாகத்தில் கல்விக்கும் பள்ளிக்கல்விக்குமான வேறுபாடு, இன்று நாம் கண்டுகொண்டிருக்கும் உலகளாவிய பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளின் தோன்றல், சரித்திரம், நிறை குறைகள் , குருகுலக் கல்விக் காலம் முதல் ஆங்கிலேயர்கள், மெக்காலே, விடுதலைக்குப் பின் இன்று வரையான நம் நாட்டின் கல்வி முறைச் சரித்திரம் குறித்த ஆய்வுகளைப் பேசுகிறது இந்நூல். அதன் பின் குழந்தைகளின் உளவியல் ஆய்வு, ஆசிரியரின் பங்கு பற்றிய ஆய்வுகளை விவரிக்கிறார் ஆசிரியர். பல நூறாண்டு காலமாக நம் நாட்டில் நிலவி வந்த சட்டங்கள் சூழல்கள், மாற்றங்கள், நம் மீதான அவைகளின் தாக்கம் போன்றவற்றைப் புரிந்தாலே ஒழிய இன்று நாம் எங்கு நிற்கிறோம், எதை நோக்கி நகர வேண்டும் என்ற முடிவுகளைத் தெளிவாக விவரிக்க இயலும் . அடிப்படையில் இரா. நடராசன் ஒரு அனுபவமிக்க ஆசிரியர்.புத்தகம் கல்வி சூழலில் இருப்பவர்களை, முக்கியமாக ஆசிரியர்களை நோக்கி எழுதப் பட்டிருந்தாலும், ஒரு குழந்தையை குழந்தையாகப் பார்க்காமல், ஒரு சந்தை பொருளாக, கருத்து அடிமைகளாக மாற்றி, அவர்களின் மீது
அசாதாரணமான வன்முறைகளை சாதாரணமாக நிகழ்த்திப்ப் பார்க்கும் நம் சமூகத்தின் பெற்றோர் , பொத்தாம் பொதுவாகக் கல்வி முறை, பள்ளி கூடங்கள், பாட புத்தகங்கள் மீது கருத்துகளை அள்ளி வீசுவோர் அனைவரும் இந்நூலிலிருந்து அறிந்து தெளிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். கற்றலிலேயே இயங்கும் வாழ்வில் சிறு பகுதியை ஒதுக்கி அது குறித்து அறிய ஒரு முயற்சி .

"இது யாருடைய வகுப்பறை? "- இரா. நடராசன்
248 பக்கங்கள்
Books for children வெளியீடு
செப்டம்பர் 2013
http://www.udumalai.com/?prd=ithu%20yarudaya%20vagupparai?&page=products&id=13583

Friday, August 22, 2014

நிலமெல்லாம் ரத்தம் - பா ராகவன்

 இணையம் பற்றிய ஒரு பொதுவான கருத்து இங்குள்ள அனைவரும் நுனிப்புல் மேய்கிறனர், ஆழ்ந்த வாசிப்பு குறைந்துவிட்டது போன்றவை. என்னளவில் இது தலைகீழ். நிறைய இல்லையென்றாலும், என்னைப் புத்தகங்களுக்கு அறிமுகம் செய்து கொஞ்சமேனும் வாசிக்க வைப்பதில் பெரும்பங்கு வகிப்பது இணையம் தான்.  ஜெமோ, சாரு, இலக்கியம், பின் நவீனத்துவமெல்லாம் எனக்கு  ரொம்ப தூரம். பெரும்பாலும் Non - fiction வகையறாக்களே எனது விருப்பம். அதிஷா (athishaonline.com) அவ்வப்போது சில புத்தக அறிமுகங்கள் , பரிந்துரைகளை அவரது ப்ளாக்கில் செய்கிறார். எல்லோரும் இது போல செய்தால்  என் போன்றோருக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும்.


விஷயத்துக்கு வருகிறேன்.வரலாறு தெரியாதவன் அழிந்து போவான் என்று ஒரு கூற்று உண்டு. வரலாறெல்லாம் எனக்குப் பத்தம் வகுப்போடு முடிந்த வஸ்து.  இஸ்ரேல் - பாலஸ்த்தீன் விவகாரம், விவரம் தெரிந்த நாளிலிருந்து கேள்விப்படும் ஒரு விஷயம். உண்மையில் இது நாள் வரையில் இதன் மீதான எனது புரிதல் என்பது உலக வரைபடத்திலோ ஏன் மத்திய கிழக்கு வரைபடத்தயே காட்டினாலும் இந்த இடங்கள் சரியாக எங்கு உள்ளன என்று காட்டத் தெரியாது. யாசிர் அராபத் பெயரைத் தாண்டி ஏதும் தெரியாது. அங்கு நடப்பது என்ன என்றும் தெரியாது. ஆனாலும் பார்ப்பதை, கேள்விப் பட்டவைகளை வைத்து அபிப்ராயங்கள் கொண்டு கருத்துக்கூறவும் முற்பட்டிருக்கிறேன் எனபதைக் கரும சிரத்தையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


  
சமீபத்தில் (எந்தக் காலத்தில் படித்தாலும் இந்த  விஷயத்தில் "சமீபத்தில்" என்ற வார்த்தை பொருந்திப் போகும் வாய்ப்புகள் அதிகம் ) நடந்த காஸா தாக்குதல் இது பற்றி  தெரிந்து கொள்ளத் தூண்டியது. இணயத்தில் நிறைய ஆனால் அரைகுறையன தகவல்களே சிக்கின.கிடைத்திதெல்லாம் படித்தாலும்  திருப்தி இல்லை.  இதுசமயம் என் தந்தையின் தோழர் ஒருவர் வீட்டிற்குப் போனபோது முதல் சந்திப்பிலேயே சில  பரிந்துரைகள் செய்து புத்தகங்களையும் கொடுத்தார். அதில் ஒன்று "நிலமெல்லாம் ரத்தம்". "When the Student is ready, the teacher appears" என்பது பதம். பா ராகவன் தோன்றினார். 

ஆங்கிலத்தில் கூட இப்படி ஒரு புத்தகம் இருக்குமா என்பது சந்தேகம். சத்தியமாக தமிழில் இது போன்ற ஒன்றை நினைத்துக் கூடப்பார்க்கவில்லை. எழுநூறு பக்கங்களில் சரி பார்க்கப்பட்ட, தெள்ளத் தெளிவான, அதுவும் போர் அடிக்காமல் படிப்பவரைக் கட்டிப் போடும் நான்காயிரம் ஆண்டு வரலாறு. ஆபிரகாம் என்ற மனிதர் தொடங்கி 2005 ஆம் ஆண்டு வரை.
மொத்த உலக நடப்புகளும், முக்கியமாக ஐரோப்பிய வரலாறும் இந்த விஷயத்தில் எவ்வளவு பங்கு வகித்திருக்கிறது என்பது படித்தால்  விளங்கும். பத்து, நூறு, ஆயிரங்கள், லட்சங்கள் என்று கணக்கு வழக்கில்லாமல் உயிர்களைக் காவு வாங்கி ரத்த ஆறு ஓட விட்ட ஒரு வரலாறு. மதம், இனம், மொழி, பொருளாதாரம், அரசியல், சூழ்ச்சிகள், வல்லரசுகளின் நாட்டாமை என்று எதுவெல்லாம் மனிதத்துக்கு எதிராக சதி செய்யுமோ அத்தனையும் சேர்ந்ததொரு சிக்கலான நீண்ட கதை.
மறதி ஒரு தவிர்க்க முடியாத வியாதி என்றாலும் இந்த விஷயத்தில் ஒரு சாபமே. சமீபத்தய வரலாறு கொண்டு எதையுமே கணிக்க முடியாது. யூதர்களை நாடு நாடாக ஒட ஒட விரட்டி கொன்ற வரலாற்றில் இருந்து  அரபியர்கள் வஞ்சிக்கப்பட்டு  சொந்த மண்ணில்  அகதியாகி துப்பாக்கி ஏந்தும் நிலைக்கு எவ்வாறு தள்ளப்படார்கள் என்று படித்தால் எல்லாம் வியப்பே. மற்ற தீவிரவாத இயக்கங்களைப் போல இவர்களும்  வல்லரசுகளால் முத்திரை குத்தப்பட்டாலும் மண்ணின் மைந்தர்களுக்கு இவர்கள்  போராளிகளே என்பதை விளக்குக்குகிறார்.
சரியானதொரு தலைமை இல்லாதது, சகோதர அரபு நாடுகள் அமைதிகாப்பது, கல்வி இல்லாமை, எண்ணை வளமும் இல்லாமல் போன ஒரு பொருளாதாரம், தினம் தினம் யுத்தமே வாழ்க்கை என்று இறங்கு முகமாகவே பாலஸ்தீன். இஸ்ரேலின் அரசு நேர்த்தி, அமெரிக்க ப்ரிட்டன் ஒத்தூதுதல் , உலகின் தலை சிறந்த உளவு நிறுவனமான அவர்களது மொசாட் இயக்கம்  என பல பல தகவல்கள்.

ஜெருசலேம் - ஆபிரகாமிய மும் மதங்களுக்கும் புனிதத் தளம். பிரச்சனையின் ஆதிமூலமே இங்கு தான். அங்கு என்ன இருந்தது, இருக்கிறது என்று ஏன், எதற்கு எப்படி எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கிறார்.
எல்லா இடங்களிலும் தகவல்கள் மட்டுமின்றி  அதிலிருந்து அறிய வேண்டிய கருத்துகளயும் புரியுமாறு விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
நம் நாடு மட்டுமல்லாமல் ப்ரிட்டன் பல நாடுகளைக் குடிமுழுக வைத்தது தெரிந்த விஷயமே. பாலஸ்த்தீனில் அவர்கள் அடிமடியிலேயே கைவைத்தது எப்படி என்பது படித்தால் விளங்கும்.   
புல்லரிக்க வைக்கும் ஹிட்லரின் பக்கங்களும், உணர்ச்சி மிக்க அராபத்தின் சரித்திரப்  பக்கங்களும் அவ்வளவு எளிதில் மனதை விட்டு அகலாது. 
நிச்சயமாய்த் தமிழில் இது ஒரு அரிய படைப்பு.  இவ்வளவு தகவல்களையும் சரி பார்த்து, தொகுத்து சார்பில்லாமல் எழுதுவது என்பது அளப்பரிய காரியம். ஆசிரியர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்
குமுதம் ரிப்போர்ட்டரில் ஒரு வருடம் வெளிவந்த தொடரை ஒரே மூச்சில் படித்து முடித்தது விளக்க முடியாத உணர்வுகளைத் தருகிறது.
ஒப்பிடவே முடியாவிட்டலும் நம் நாட்டில் எவ்வளவு சுதந்திரமும், சுகங்களையும் அனுபவிக்கிறோம் என்பது வேற்று நாட்டு நடப்புகளைப் படித்தால்தான் புரிகிறது. இருந்தாலும் நாம் போக வேண்டிய தூரம் அதிகம்.
பாலஸ்த்தீன் பிரச்சனை மட்டுமல்ல உலகில் மனிதம் எப்படியெல்லம் வஞ்சிக்கப்படது வஞ்சிக்கப்படுகிறது என்று அறிய விளையும் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி பா. ராகவன்

புத்தகம் : நிலமெல்லாம் ரத்தம்
ஆசிரிய‌ர் : பா.ராகவன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 704
https://www.nhm.in/shop/978-81-8368-090-5.html

 

Tuesday, July 8, 2014

இரயில் பயணங்களில்...

 

சாயுங்கால நேரம். தொலை தூரம் போற ரயில். இஷ்டமிருக்கோ இல்லயோ யாரோ நமக்கு ஒதுக்குன கோச்ல ஏறனும்.  S1னு வச்சுப்போம். ஏதோ ஒரு காரணத்துக்காக S12 போகனும். அப்டியே நடந்தம்னா வழி நெடுக முகங்கள் தான். பரிச்சயம் இல்லாதவை. ஜன்னல் கம்பில நிக்குற மழைத்துளி , அழுகுற கைக்கொழந்த, அத தூங்க வைக்க தொட்டில் கட்ற அப்பா அம்மா, பொம்மயோட பேசிக்கிட்டு இருக்கிற குட்டி பொண்ணு, சாமிக்கு மாலை போட்ட பக்தர்கள்,   கீழ் பெர்த் கெடைக்குமானு காத்திட்டு இருக்கிற பாட்டி, வீடியோ கேம் விளையாடுற பையன், SRMUனு பாக்கெட்ல இருக்கிற அட்டையோட யூனியன் விவகாரங்கள் பேசுற ரயில்வே பணியாளர்கள்,   பைபிள் வாசிக்கிற சிஸ்டர், டிக்கட் இருந்தும் சீட்டுக்கு போகாம மொபைல சார்ஜ் போட்டு மெச்சேஜ் அனுப்பிட்டு இருக்கிற விடலப்பையன், இரவல் கேட்டு வரும் ஊனமுற்றோர், எப்பவும் ரெண்டு பேரா கதவு பக்கம் நிக்கிற போலீஸ். புது நக , புது ட்ரெஸ்ஸோட  அந்நியோனியம் பழகுற புதுமணத் தம்பதி, எங்கயோ வேலை பாக்குற மகனோ மகள் வீட்டுல பத்து நாள் தங்கப் போற வயசான அப்பா அம்மா.  இயர்போன்ஸ் மாட்டிட்டு மேல் பெர்த்துல உக்காந்து சத்தமில்லாம  போன் பேசிட்டு வர்ற காலேஜ் பொண்ணு, யூனிபார்ம்ல ட்ரிப் போற பள்ளிகூட மாணவர்கள், சந்தோசமா மேற்பார்வ செய்ற ஆசிரியர்கள்,ஒரு கோல புக்காவது விக்காதானு வர்ற வியாபாரி, 20 - 25 பைகளோட வந்திருக்கிற மார்வாடி குடும்பம், டென்ஷனாவே இருக்குற TT, மனைவி குழந்தைக்கு மட்டுமாவது சீட் கெடைக்குமானு கேக்க வர்ற கணவன் , குண்டு புக் படிக்கிற அங்கிள், பயணத்திலயும் தொழுகை செய்ற தாடிக்காரர் , ராசி பலன் படிக்கிற தாத்தா, அஞ்சு ரூபாய்க்கு குறையா குடுத்த பிரச்சன பண்ற திருநங்கைகள், தனி பெட்டி  ரயில் ஆம்புலன்ஸ்ல ஊசலாடிக்கிட்டு இருக்கிற உயிர்.  அவ்வளவும்  வித்யாசங்கள், உணர்ச்சிகள் , தேடல்கள். எதோ ஒரு சமயத்தில இந்த எல்லாத்தயுமே நம்மளும் வாழ்ந்தோ கடந்தோ வந்திருப்போம்.  இதெல்லாம் படிக்கிறப்ப நாம கற்பனை பண்ணிக்கிற உருவங்கள் கூட வேற வேற தான். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு உலகத்தில ஆனா ஒரே ரயில்ல. கடசியா எறங்கப் போறதும் ஏறுன எடமே தான். ப்ளாட்பார்ம். அவ்வளவுதான்  வாழ்க்க!