Tuesday, July 8, 2014

இரயில் பயணங்களில்...

 

சாயுங்கால நேரம். தொலை தூரம் போற ரயில். இஷ்டமிருக்கோ இல்லயோ யாரோ நமக்கு ஒதுக்குன கோச்ல ஏறனும்.  S1னு வச்சுப்போம். ஏதோ ஒரு காரணத்துக்காக S12 போகனும். அப்டியே நடந்தம்னா வழி நெடுக முகங்கள் தான். பரிச்சயம் இல்லாதவை. ஜன்னல் கம்பில நிக்குற மழைத்துளி , அழுகுற கைக்கொழந்த, அத தூங்க வைக்க தொட்டில் கட்ற அப்பா அம்மா, பொம்மயோட பேசிக்கிட்டு இருக்கிற குட்டி பொண்ணு, சாமிக்கு மாலை போட்ட பக்தர்கள்,   கீழ் பெர்த் கெடைக்குமானு காத்திட்டு இருக்கிற பாட்டி, வீடியோ கேம் விளையாடுற பையன், SRMUனு பாக்கெட்ல இருக்கிற அட்டையோட யூனியன் விவகாரங்கள் பேசுற ரயில்வே பணியாளர்கள்,   பைபிள் வாசிக்கிற சிஸ்டர், டிக்கட் இருந்தும் சீட்டுக்கு போகாம மொபைல சார்ஜ் போட்டு மெச்சேஜ் அனுப்பிட்டு இருக்கிற விடலப்பையன், இரவல் கேட்டு வரும் ஊனமுற்றோர், எப்பவும் ரெண்டு பேரா கதவு பக்கம் நிக்கிற போலீஸ். புது நக , புது ட்ரெஸ்ஸோட  அந்நியோனியம் பழகுற புதுமணத் தம்பதி, எங்கயோ வேலை பாக்குற மகனோ மகள் வீட்டுல பத்து நாள் தங்கப் போற வயசான அப்பா அம்மா.  இயர்போன்ஸ் மாட்டிட்டு மேல் பெர்த்துல உக்காந்து சத்தமில்லாம  போன் பேசிட்டு வர்ற காலேஜ் பொண்ணு, யூனிபார்ம்ல ட்ரிப் போற பள்ளிகூட மாணவர்கள், சந்தோசமா மேற்பார்வ செய்ற ஆசிரியர்கள்,ஒரு கோல புக்காவது விக்காதானு வர்ற வியாபாரி, 20 - 25 பைகளோட வந்திருக்கிற மார்வாடி குடும்பம், டென்ஷனாவே இருக்குற TT, மனைவி குழந்தைக்கு மட்டுமாவது சீட் கெடைக்குமானு கேக்க வர்ற கணவன் , குண்டு புக் படிக்கிற அங்கிள், பயணத்திலயும் தொழுகை செய்ற தாடிக்காரர் , ராசி பலன் படிக்கிற தாத்தா, அஞ்சு ரூபாய்க்கு குறையா குடுத்த பிரச்சன பண்ற திருநங்கைகள், தனி பெட்டி  ரயில் ஆம்புலன்ஸ்ல ஊசலாடிக்கிட்டு இருக்கிற உயிர்.  அவ்வளவும்  வித்யாசங்கள், உணர்ச்சிகள் , தேடல்கள். எதோ ஒரு சமயத்தில இந்த எல்லாத்தயுமே நம்மளும் வாழ்ந்தோ கடந்தோ வந்திருப்போம்.  இதெல்லாம் படிக்கிறப்ப நாம கற்பனை பண்ணிக்கிற உருவங்கள் கூட வேற வேற தான். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு உலகத்தில ஆனா ஒரே ரயில்ல. கடசியா எறங்கப் போறதும் ஏறுன எடமே தான். ப்ளாட்பார்ம். அவ்வளவுதான்  வாழ்க்க!